கல்வி மொபைல் செயலி உருவாக்கி சாதனை புரிந்த 27 ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம் கல்வி ஆகியன இணைந்து சேலம், நாமக்கல் மாவட்டத்தின் 27 ஆசிரியர்களை தேர்வு செய்து மொபைல் கல்வி செயலி உருவாக்கும் வகையில் 45 நாள் பயிற்சியினை அளித்தது. இதனை தொடர்ந்து கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் சிறந்த மொபைல் செயலியை குருகிய நிமிடத்தில் உருவாக்கி சர்வதேச சாதனை புரியும் நிகழ்ச்சியை அண்மையில் நாமக்கல் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் நடத்தியது.

இதனை தொடர்ந்து 27 ஆசிரியர்களும் புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பிரதிநிதிகள் முன்னிலையில் உலக சாதனை-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று கல்வி செயலி வடிவமைத்தனர். ஆசிரியர்கள் 27 பேரும், கல்வி கற்பிப்பு, மதிப்பெண் வழங்கல், தேர்வு மதிப்பெண் திருத்தம், வலைதளம் உருவாக்கம் போன்றவை குறித்த செயலியை 10.14 நிமிடத்தில் உருவாக்கி சாதனை புரிந்தனர்.

இதனை தொடர்ந்து உலக சாதனை புரிந்த ஆசிரியர்களுக்கான பாராட்டி சான்றிதழ்கள் வழங்கும் விழா ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இதற்கான விழாவில் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். இதில் பேசிய அவர் தொடர் பயிற்சியினால் ஆசிரியர்களால் இது போன்ற சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறந்த சாதனை படைக்கும் மாணவர்களை உருவாக்கிட முடியும் என்றார். விரிவுரையாளர் ஏ.சிவபெருமான் வரவேற்றார். ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம், இன்னர்வீல் சங்கத் தலைவர் சி.சுதாமனோகரன் முன்னிலை வகித்தனர். விழாவில் புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ஸ்ட் நிறுவனத் தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றிப் பேசினார். இதில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் புதிய செயலியை கொல்லிமலை நத்துக்குழிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.சந்திரசேகரன் வடிவமைத்து உருவாக்கி வெளியிட்டார். ரோட்டரி மாவட்ட மகிழ்ச்சிப் பள்ளிகளின் தலைவர் கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், ராசிபுரம் இன்னர்வீல் சங்கச் செயலர் சிவலீலாஜோதி, ரோட்டரி நிர்வாகிகள் ஜி.தினகரன், வெங்கடஜலம், நடராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முடிவில் ராசிபுரம் ரோட்டரி சங்கச் செயலர் ராமசாமி நன்றி கூறினார்.