நாமக்கல் மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர் பேரூராட்சி பகுதியில் அதிமுக ஆட்சியின் சாதனை திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ,அதிமுக ஆட்சியின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகள் குறித்தும், திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், அம்மா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு தெரு பிரச்சாரம், துண்டு பிரசுரம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதன்படி, அத்தனூர் பேரூராட்சி பகுதியில் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் இ.ஆர்.சந்திரசேகர் தலைமையில் தெருமுனை கூட்டம், துண்டு பிரசுரம் வினியோகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளருமான பி.தங்கமணி பங்கேற்று, கடந்த அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கிக்கூறி, வீடுகள்,வணிக நிறுவனங்கள் தோறும் சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். மேலும் திமுக ஆட்சியில் போதை பொருள் நடமாட்டம், கொலை, கொள்ளை அதிகரித்திருப்பதாகவும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிரணி இணைச் செயலாளருமான டாக்டர் வி.சரோஜா, அத்தனூர் பேரூர் அதிமுக செயலர் செழியன், மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலர் எஸ்.பிரகாஷ், அம்மா பேரவை மாவட்டத் தலைவர் இ.குமரேசன் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.