நாமக்கல் மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி செயற்குழு கூட்டம் சேலம் சாலையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், மக்களவைத் தொகுதி உறுப்பினருமான வி.எஸ்.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வருகிற 17-ம் தேதி தீரன் சின்னமலை பிறந்த தினவிழாவை தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் தலைமையிலும், கட்சியின் பொதுச்செயலர் இ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலையிலும், மாலை அணிவிக்கும் நிகழ்வும், தொடர்ந்து கட்சியின் மாநிலப் பொதுக்குழு நிகழ்வும் நடைபெறும். இதில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திரளாக பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

பாராாளுமன்றத்தில் நாமக்கல் மாவட்டத்தின் பிரதான தொழிலான போக்குவரத்து, கோழப்பண்ணை தொழிலுக்கு குரல் கொடுத்த வி.எஸ்.மாதேஸ்வரன் எம்பிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான வேட்பாளர் வெற்றிக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத்திலும் சிறப்பாக பணியாற்றுவது என்றும், கட்சியின் பொறுப்பாளர்கள் தங்களது பகுதியில் உள்ள பிரச்சனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் கவனத்துக்கு கொண்டு வந்து தீர்த்து வைப்பது என்றும், பாராளுமன்ற உறுப்பினர் மீது தவறான புகார் கூறி போஸ்டர் அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எம்பிக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.