ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச ரோட்டரி அறக்கட்டளை நிதி திட்டத்தின் கீழ் இம்மருத்துவமனைக்கு ஏற்கனவே ரூ.27.40 லட்சம் மதிப்பில் காசநோய் கண்டறியும் கருவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம் தலைமையில் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 காசநோயாளிகளுக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு, எண்ணெய் போன்ற ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன. ராசிபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், என்.பி.ராமசாமி, இ.என்.சுரேந்திரன், கே. ராமசாமி, ஜி.ராமலிங்கம், டி.பி. வெங்கடாஜலபதி, மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்று நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினர்.

காசநோய் விழிப்புணர்வு
இதே போல் ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் காச நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ப. அசோக் குமார் துவக்கி வைத்து வரவேற்றுப் பேசினார். அத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையம், காச நோய் பிரிவின் மருத்துவர் ஆர்.வாசுதேவன் மாணவர்களுக்கு காச நோயின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், நோய் பரவும் முறைகள், காசநோயினால் ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காச நோய் பிரிவு நலக்கல்வியாளர் ராமசந்திரன், மேற்பார்வையாளர் இரா.முருகேசன், கல்லூரியின் பேராசிரியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.