ராசிபுரம், மார்ச்.16: இந்தியை விரும்பியவர்கள் யாரும் படிக்கலாம். ஆனால் தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை என மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் குறிப்பிட்டார்.

இந்தி திணிப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி என்பதை முன்வைத்து மத்திய அரசை கண்டித்து மத்திய அரசை கண்டித்து ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பாக நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர திமுக செயலர் என்.ஆர். சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி ம.கார்த்திக், இரா.பிரபாகரன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், திராவிடர் கழக பேச்சாளர் வழக்குரைஞர் மதிவதினி ஆகியோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்துப் பேசினார்.

கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் பேசியது:
நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் திமுக சொன்ன வாக்குறுதிகளான பெண்களுக்கான இலவச பஸ் பயணம், 5 சவரன் நகை கடன் தள்ளுபடி, புதுமைப் பெண் திட்டத்தில் கல்லூரி மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000, மகளிர் சுய உதவிக்கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத்தொகை திட்டம் என தேர்தலின் போது சொல்லாததையும் செயல்படுத்தப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கு இது முன்னோடியாக உள்ளது.
40 ஆண்டுகளில் செயல்படுத்தாத திட்டங்கள் 4 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ளது தான் திராவிட மாடல்
ராசிபுரம் தொகுதி வளர்ச்சிக்கும் புதிய குடிநீர் திட்டம், சாலை வசதி என பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதே போல் மாவட்ட தலைமை மருத்துவமனை ரூ.60 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. ரூ.140 கோடியில் போதமலை பகுதிக்கு சாலை வசதி, திருவள்ளுவர் அரசு கல்லூரியில் தமிழகத்தில் முதன் முதலில் அமையவுள்ள முதல் மினி டைடல் பார்க், நாமக்கல் மாவட்டத்திற்கு தனியாக மத்திய கூட்டுறவு வங்கி என பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளில் செயல்படுத்தாத தி்டடங்கள் 4 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தான் திராவிட மாடல் அரசு. மத்திய அரசால் இதையெல்லாம் பொருத்துக்கொள்ள முடியவில்லை. எதையாவது சொல்லி இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம். தற்போது தமிழக அரசுக்கு நிதி தரக்கூடாது என பிரச்சனையை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. மும்மொழி கொள்கையை கொண்டுவரவில்லை என இதற்கான காரணம் சொல்கின்றனர். இந்தியை ஒரு பாடமாக கொண்டுவர வேண்டும் என்கின்றனர். நாங்கள் எப்போதும் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. விரும்பியவர்கள் இந்தி படிக்கலாம். ஆனால் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும். படித்தால் தான் நிதி தருவோம் என சொல்வதை தான் எதிர்கிறோம். அரசு பள்ளிகளில் ஆங்கிலம், தமிழ் என்ற இரு மொழிக்கொள்கை தான். இந்தி மொழியை திமுக எதிர்பதற்கு காரணம். இந்தி திணித்தால் தாய் மொழியை அழித்துவிடும். ஒரு இனத்துக்கு அடையாம் மொழி தான். இந்த மொழியை அழிக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம். இதனை எதிர்த்து தான் மாநிலம் முழுவதும் இது போன்ற கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது என்றார்