நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் லட்சுமி பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்ற இதில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கும் செய்து வைக்கும் சிவாச்சாரியார்கள்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் குருசாமிபாளையம் தோப்புக்காட்டில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மகா சம்ரோஷணம் எனும் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவினை அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சிற்ப சாஸ்திர முறைப்படி ஆலயம் அமைத்து அதில் புதியதாக விநாயகர், லட்சுமி நரசிம்மர் , லட்சுமி ஹயக்ரீவர்,கருடாழ்வார்,ஆஞ்சநேயர், புதிய பரிவார மூர்த்திகள், நவகிரகங்கள் மற்றும் சக்கரத்தாழ்வாருடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் மூன்று நாட்களுக்கும் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை குருசாமிபாளையம் சிவஸ்ரீ மு பழனிசாமி சிவாச்சாரியார் , சிவ ஸ்ரீ ரத்தின சபாபதி சிவாச்சாரியார், ஸ்ரீமான் ரங்கராஜப் பட்டாச்சாரியார், ஸ்ரீமான் சுதர்சன நாராயண பட்டாச்சாரியார் , ஸ்ரீலஷ்மண பட்டாச்சாரியார் ஆகியோர் நான்கு கால பூஜைகள் நடத்தினர். அத்துடன் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலம் சென்றனர். கும்பாபிஷே விழாவில் குருசாமிபாளையம் ஊர் பெரியதனக்காரர் மற்றும் காரியக்காரர்கள், பாலப்பாளையம் ஊர் பெரியதனக்காரர் மற்றும் காரியக்காரர்கள், 85-R கொமாரபாளையம் நாட்டாண்மைக்காரர், பெரியதனக்காரர், காரியக்காரர்கள், 85-R கொமாரபாளையம் நாடார் குல பொதுமக்கள் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை மாலை ஸ்ரீதேவி பூதேவி ஸமேத லக்ஷ்மி நாராயண சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறவுள்ளது.