நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகேயுள்ள கல்கட்டனூர் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியிடம் ரூ.22 பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்த திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக போட்டோகிராபர் கே.சந்தானம் என்பவரை புகாரின் பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகேயுள்ள கல்கட்டனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (60) என்பவரது மகன் செல்வகுமார் (25), பி.இ., மெக்கானிக்கல் பட்டதாரி. இவருக்கு தொப்பப்பட்டி ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜெகதாம்பாள் என்பவர் மூலம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் போட்டோகிராபராகப் பணியாற்றி வரும், நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியை சேர்ந்த குப்பண்ணன் மகன் சந்தானமூர்த்தி (44) அறிமுகமானார்.
அரசு வேலை வாங்கித்தருவதாக சந்தானம் கூறியதையடுத்து 10.09.2021 செல்வகுமார் தந்தை கிருஷ்ணமூர்த்தி ரூ.22 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கித்தராமலும், பல ஆண்டுகளாக பணத்தை திருப்பித்தராமல் சந்தானம் மோசடி செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து இது தொடர்பாக பொறியியல் பட்டதாரி செல்வகுமார் தந்தை கிருஷ்ணமூர்த்தி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் கொடுத்ததின் பேரில் ராசிபுரம் உட்கோட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் திருவள்ளூர் மாவட்டம் சென்று ஆட்சியர் அலுவலக பணியில் இருந்து வந்த புகைப்பட கலைஞர் சந்தானத்தை கைது செய்து நாமகிரிப்பேட்டை அழைத்து வந்தனர். பின்னர் விசாரணை நடத்தி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். சந்தானம் ஏற்கனவே, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் போட்டோகிராபராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.