நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் பழமைவாய்ந்த, அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பிப். 18ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 25ல் மறு பூச்சாட்டுதல், 27ல் தேதி கொடியேற்றம் என தினசரி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் 15ஆம் நாளான புதன்கிழமை முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் விழா நடந்தது..

இதில் கடந்த 15 நாட்களாக கடுமையான விரதமிருந்து மஞ்சள் நிற ஆடை அணிந்த ஆண்களும், பெண்களும் இன்று அதிகாலை காவிரியில் புனித நீராடி சக்தி அழைப்பு நிகழ்ச்சிக்கு பின், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலின் தலைமை பூசாரி சதாசிவம் தலைமையில் பூங்கரகத்துடன் காளியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, குண்டம் விழாவை துவக்கி வைத்தார். இதையடுத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று குண்டம் இறங்கினர். ஆண்கள், மற்றும் பெண்கள் பலரும் தங்கள் குழந்தைகளுடனும், அலகு குத்தியவாறும் குண்டம் இறங்கினர். மாலையில் பக்தர்கள் பெரும்பாலோர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். போலீசார், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.