நாமக்கல் மாவட்டத்தின் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2023 ஏப்ரல் முதல் பணியாற்றி வந்த டாக்டர் வீ. ராமராஜ் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவின் உறுப்பினராக இன்று (04-03-2025) பதவி ஏற்று கொண்டுள்ளார்.

லோக் ஆயுக்தா தலைவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கான சம்பளமும் படிகளும் உறுப்பினருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிக்கான சம்பளமும் படிகளும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் விசாரணை பிரிவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பதிவாளராகவும் நிர்வாகப் பிரிவில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி செயலாளராகவும் புலனாய்வு பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இயக்குனராகவும் உள்ளார்கள். இந்த அமைப்பில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றுகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டில் பிறந்தவர் வீ. ராமராஜ். இவர் நீதி நிர்வாகத்தில் முனைவர் பட்டமும் காவல் நிர்வாகத்தில் இளம் முனைவர் பட்டமும் பெற்றவர். அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம், தொழிலாளர் நலன் மற்றும் நிர்வாக சட்டம், குற்றவியல் மற்றும் காவல் நிர்வாகம், சர்வதேச உறவுகள், இதழியல், பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், குற்றவியல் நீதி, குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முதுநிலை பட்டங்கள் உட்பட பதினைந்து பட்டங்கள் பெற்றுள்ளார். சென்னை, பழனி, ஓசூர் ஆகிய நகரங்களில் சுமார் 30 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கமிஷனில் 13 மாதங்கள் உறுப்பினராகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக அரியலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மாவட்ட நுகர்வோர் நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பார்
பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சட்ட மாநாடுகளில் பங்கேற்பதற்காக பயணித்துள்ள இவர் 25 சர்வதேச ஆய்வு கட்டுரை எழுதியுள்ளார். நீதிபதிகள் உட்பட 24 நபர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக பணியாற்றியுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக உள்ள இவரது மனைவி கௌரி மணி தற்போது விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இன்று முதல் ஐந்து ஆண்டு காலத்துக்கு வீ. ராமராஜ் லோக் ஆயுக்தா உறுப்பினராக பதவி வகிப்பார்.
விரைந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி
நாமக்கல்லில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தொடங்கப்பட்ட நவம்பர் 2000 முதல் கடந்த மார்ச் 2023 வரை 1107 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதியாக கடந்த 2024 மார்ச் இறுதியில் டாக்டர் வீ. ராமராஜ் பதவியேற்றார். கடந்த 2023 ஏப்ரல் முதல் தற்போது வரை 23 மாதங்களில் 500க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். கடந்த ஓராண்டு காலத்தில் கோயம்புத்தூரில் இருந்து விரைவான விசாரணைக்காக மாற்றலாகி வந்த 128 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2023 மார்ச் மாதத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது வழக்கு தாக்கல் செய்து ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் இல்லை என்ற நிலை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சமரச தீர்வு மூலம் வழக்குகளை தீர்த்து வைத்ததில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் முதலிடம் வகிக்கிறது.
நீதிமன்றத்துக்கு சென்றால் அதிக காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால் பாதிக்கப்படும் 100 நுகர்வோர்களின் நுகர்வோர்களில் ஐந்து நுகர்வோர் மட்டுமே நீதிமன்றத்தை நாடுகின்றனர். கடந்த 20 ஆண்டு காலமாக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஆண்டு சராசரி 50 மட்டுமே. ஆனால், கடந்த இரண்டு மாதத்தில் நுகர்வோரால் 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.