அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII-Ahmedabad), சங்கல்ப் திட்டத்தின் (Project-SANKALP) கீழ் சணல் தயாரிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிறுவனம் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியின் உதவியுடன் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறது. நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை கிராமத்தில் கடந்த மாதம் சணல் பைகள் தயாரிப்பு பயிற்சிகள் 16 நாட்கள் நடைபெற்றது.
சணல் பைகள் தயாரிப்பில் நுண் திறன் மேம்பாட்டு பயிற்சி வெற்றிகரமாக முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா (28-02-2025) புதன் சந்தையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாமக்கல் மாவட்டத் தொழில் மையம் சர்வே மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் C.M.மகேஷ் குமார், தலைமையேற்று பேசினார். அவர் பேசுகையில் இந்த சிறு குறு தொழில் பயிற்சி ஆனது கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். மேலும் சிறு குறு தொழில்கள் சம்பந்தமான கடன் மானியத்துடன் அரசு கடன் உதவி திட்டங்கள் பற்றி மகேஷ் குமார் எடுத்துக்கூறினார். அதனைத் தொடர்ந்து EDII (EDII-Ahmedabad) அகமதாபாத்தை சேர்ந்த அதிகாரி மற்றும் தொழில் முனைவு நிபுணர் K.சரவணன் பெண்கள் முன்னேற்றத்தில் சுய தொழிலின் அவசியத்தை பற்றி பேசினார். அவர், பெண்களுக்கு தங்கள் வாழ்கையில் சுய தொழிலுக்கான திறன்கள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவது எவ்வாறு முக்கியம் என விரிவாக விளக்கினார். இவ்வாறு சுய தொழிலில் தன்னம்பிக்கை மற்றும் பொருளாதார சுதந்திரத்தை பெறும் வழிகளை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த பயிற்சியில் பங்குபெற்ற அனைத்து பெண்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் புதன் சந்தையை சேர்ந்த 60 மேற்பட்ட பெண்கள் இந்த பயிற்சியில் ஆர்வமாக கலந்து கொண்டனர், அவர்கள் எல்லாம் தொழில்நுட்பக் கல்வி மற்றும் அரசு உதவிகளுக்கான தகவல்களை பெற்று தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்கின்றனர். பயிற்சியில் கலந்து கொண்ட பெண்கள், இந்த பயிற்சி தங்களது தொழிலை விரிவுபடுத்த மிகவும் வசதியாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் புதிய மற்றும் புதுவிதமான உற்பத்தி பொருட்களை உருவாக்குவதற்கு ஊக்கமாக இருக்கும் என்று உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்தனர்.