தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் புகார் அதிகரித்து வருவதற்கு போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதே காரணம் என தமிழக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குறிப்பிட்டார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க நாமக்கல் மாவட்ட அஇஅதிமுக ஜெயலலிதா பேரவை மற்றும் ராசிபுரம் நகர அதிமுக சார்பில் அதிமுக அரசின் 10 ஆண்டு சாதனை விளக்கியும், திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் தெருமுனை பிரச்சாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை முன்பாக நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வழக்குரைஞர் இ.ஆர் .சந்திரசேகரன் தலைமை வகித்தார். ராசிபுரம் நகர அதிமுக செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். தெருமுனை பிரச்சார கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு இல்லாத நாளே இல்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா , லாட்டரி சீட்டு தாராளமாக விற்கப்படுவதால் சட்ட ஒழுங்கு சீர்கேடு உருவாகிறது. லாட்டரி,போதை பொருள் விற்பனையில் திமுகவினர் உள்ளனர் என்பதற்கு ராசிபுரம் தான் உதாரணமாக உள்ளது. திமுகவினருக்குள்ளேயே மாமூலுக்கு அடித்துக்கொள்கின்றனர். இது போன்றவற்றை தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள திமுகவினரை காப்பாற்றும் முயற்சியில் தான் காவல்துறை உள்ளது. கஞ்சா,போதை பொருள், கற்பழிப்பு,திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை காவல்துறை தடுக்க தவறினால் மாவட்ட காவல்துறையை கண்டித்து மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பின்னர் ராசிபுரம் நகரில் கடைகள், வீடு வீடுகள் தோறும் சென்று பத்தாண்டு கால அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசாரங்களை விநியோகிக்கப்பட்டது. இதில் கட்சியின் மகளிரணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெ. சரோஜா, மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ்.பி கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.