ராசிபுரம் பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா திங்கள்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஒன்றியப் பகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இதில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ஆட்சியர் ச.உமா ஆகியோர் ரூ.4.95 கோடி மதிப்பில் 495 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினர்.
இவ்விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பேசியது:
தமிழக முதல்வர் மக்களின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், கல்வி, தொழில் போன்ற தேவைகளை அறிந்து ஒவ்வொரு நபரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மாநில அளவில் அதிக வீடுகள் நாமக்கல் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் சரியான முறையில் நில அளவை செய்யப்பட்டு 860 நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை வசதி இல்லாத போதமலை மக்களின் கோரிக்கை ஏற்று ரூ.140 கோடி மதிப்பீட்டில் 31 கி.மீ தொலைவிற்கு போதமலைக்கு சாலை அமைக்கும் பணி, ராசிபுரத்திற்கு ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டடம் உள்ளிட்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். மேலும், அதிகபட்சமாக ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் 4702 நபர்கள் இலவச வீட்டுமனை பட்டாக்களை பெற்றுள்ளனர்.
மேலும், பட்டா பெறுவதில் பொதுமக்களுக்கு இருக்கும் சிரமங்களை போக்கிட நத்தம் பட்டாக்களையும் இணைய வழியில் கொண்டுவந்துள்ளார்கள். கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் மக்களைத் தேடி மருத்துவம், மக்களுடன் முதல்வர், மகளிர் உரிமைத் தொகை மற்றும் மகளிர் விடியல் பயணம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் யாரும் செய்யாத பல்வேறு திட்டங்களை கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது என்றார்.
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., பேசியது:
தமிழகத்தில் முதன் முதலில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தான் வழங்கப்பட்டது. இதனடிப்படையில்
பெண்கள் தான் நாட்டின் கண்கள் என்பதை கருத்தில் கொண்டு தற்போது தமிழக முதல்வர் பெண்களின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி மகளிருக்கு பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம், மகளிருக்கு மாதம் என பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
இந்தியாவில் முதன்முறையாக மகளிர் சுய உதவி குழுக்கள் என்னும் முறையை தமிழ்நாட்டில் உருவாக்கி தற்பொழுது இதன் மறுமலர்ச்சியாக மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் மற்றும் நகைக்கடன்களை முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக புதிதாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பயணத் திட்டம், மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. மேலும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்கீழ் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டத்தரப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன், ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன், முன்னாள் எம்எல்ஏ., கே.பி.ராமசாமி, நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.