தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு கமிசன் அமைக்கப்பட வேண்டும் நுகர்வோர் நீதிபதி வலியுறுத்தல்.
அரசு சட்டக் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.ஆர்.அருண் தலைமையில் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாப்புக்கான சட்டங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராம்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது: இந்தியாவில் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1952 ஆம் ஆண்டில் நடைபெற்று முடிந்த நாளை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்க வேண்டும் என்ற எனது கருத்தை கடந்த 1995 ஆம் ஆண்டே தமிழகத்தில் பிரபலமான நாளிதழ் ஒன்று “சொல்கிறார்கள்” என தலைப்பிட்டு வெளியிட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் நிறுவன நாளைக் குறிக்கும் வகையில் ஜனவரி 25 ஆம் தேதியை “தேசிய வாக்காளர் தினமாக” கடைபிடிக்க மத்திய அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு முடிவு செய்தது. கல்வியில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளதைப் போல வாக்காளரியல் என்ற கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட வேண்டும். வாக்காளரியல் (voterology) என்ற வார்த்தை அகராதியில் கூட இல்லாத நிலைமை உள்ளது. இந்த வார்த்தையை முதன்முதலாக 1999 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிரபலமாக உள்ள நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் நான் பயன்படுத்த தொடங்கினேன்.
தேர்தல் முடிவுகள் குறித்த வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் முடிப்பதற்கு வசதியாக தேர்தல் தீர்ப்பாயங்களை அமைக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று (இந்தியா டுடேவில்) 2000 மார்ச் மாதத்தில் நான் எழுதினேன். இதன் பிறகு தேர்தல் குறித்த வழக்கு ஆறு மாதங்களுக்குள் முடிக்க தேர்தல் தீர்ப்பாயங்களை அமைக்க வேண்டும் என்று கடந்த 2005 ஆகஸ்ட் மாதத்தில் வெளியான மத்திய அரசின் இரண்டாவது நிர்வாக சீர்திருத்தத்த ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரை தற்போது வரை சட்டமாக்கப்படவில்லை.
ஒரு ரூபாய்க்கு பொருளை வாங்கினால் கூட உரிமை மீறப்படும் போது வழக்கமான நீதிமன்றங்கள் அல்லாமல் சிறப்பு அமைப்பான நுகர்வோர் ஆணையங்கள் மூலம் வழக்கு தாக்கல் செய்ய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பணத்தைவிட விலைமதிப்பற்ற தமது வாக்கை செலுத்தி ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களை தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள், நியாயமற்ற மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறைகள், இருண்ட வடிவ தாக்குதல்கள், சேவையில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது தீர்வு காண அணுகுவதற்கு வழக்கமான நீதிமன்றங்கள் அல்லாமல் சிறப்பு அமைப்புகள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
வாக்காளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மக்களாட்சியின் மீது நடத்த விடும் தாக்குதல்களை விசாரிக்கவும் தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு கமிஷனும் மாநிலங்களில் மாநில தேசிய வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன்களும் அமைக்க உடனடியாக அமைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதி வீ.ராமராஜ் பேசினார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தனிநபர்களின் மின்னணு தரவு பாதுகாப்பு சட்டம் பற்றி பேராசிரியர் ரஞ்சித் ஓமன் ஆபிரகாம் அவர்களும் செயற்கை நுண்ணறிவு காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் அதன் தாக்கம் குறித்து பேராசிரியர் தீபா மாணிக்கம் ஆகியோரும் பேசினர். கருத்தரங்கில் முன்னதாக பேராசிரியர் பி. பிரியா வரவேற்றார். இறுதியில் பேராசிரியர் சி. சுமதி நன்றி கூறினார்.