திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான 5 நாட்கள் பணியிடை பயிற்சி 20.01.2025 முதல் 24.01.2025 வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் துவக்க விழா 20.01.2025 அன்று கே.எஸ்.ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.சீனிவாசன், துணைத் தலைவர் ஆர்.எஸ். சச்சின் வாழ்த்துத்துரையோடு தொடங்கியது. கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வே.பத்மநாபன் தலைமை தாங்கினார். கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் முதன்மைத் திட்ட அலுவலர் எஸ்.பாலுசாமி வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் முனைவர் எஸ்.பிரசன்ன ராஜேஷ்குமார் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் வி.கற்பகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அறிவியல் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது பாடங்களைக் காட்சிப்படுத்தி நடத்துதல் வேண்டும், வகுப்பில் கரும்பலகையோடு நின்றுவிடாமல் செய்முறைப் பயிற்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் அறிவியல் பாடங்களை விரும்பி படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என்றும், நமது அன்றாட வாழ்விலேயே அறிவியலும் இணைந்திருப்பதை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் மாணவர்களை ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களுக்கு விடை கண்டுபிடிக்க வைப்பதன் மூலம் அறிவியலையும், அறிவியல் தொழில் நுட்பங்களையும் வளரச் செய்ய முடியும் என்று கூறினார். மேலும் இந்நிகழ்விற்கு நாமக்கல் மாவட்ட பள்ளிகளின் ஆய்வாளர் கை.பெரியசாமி கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது அறிவியல் ஆசிரியர்களின் கையில்தான் எதிர்கால தமிழகம் உள்ளது என்றும், மாணவர்கள் அறிவியலை விரும்பிப் படிக்குமாறு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் கூறினார். அவ்வாறு அரசுப் பள்ளியில் அறிவியலைப் படித்து உலகப்புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானிகள் பற்றியும், தற்போது பல அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதனை முன்னெடுத்துச் செல்வதையும் எடுத்துக் கூறினார். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் மா.வெங்கடேஷ் நன்றி கூறினார். 5 நாட்கள் நடைபெறும் பணியிடைப் பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர்.