ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் அரசு உதவி பெறும் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் பலரும் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் காலில் விழுந்து மரியாதை செய்து ஆசி பெற்ற நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி கடந்த 1974 முதல் 1981 வரை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் 43 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு மற்றும் கல்வி கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி அப்பள்ளியின் கலை அரங்கில் நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் தலைவர் ஜெயராமன் வரவேற்றார். ஏ.கே பாலச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற ஆசிரியர் , ஆசிரியைகள் , அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தங்களின் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு பொன்னாடை போர்த்தியும் சந்தன மாலை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கியும் மாணவர்கள் அவர்களிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். மேலும் பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவியர் பலரும் இதில் கலந்து கொண்டு தங்களது பள்ளி பருவம் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் கல்வி பயிற்றுவித்த விதங்கள் குறித்து நினைவுகளை பகிர்ந்தனர். இவ்விழாவில் பள்ளியின் செயலாளர் அர்த்தனாரி, பள்ளி தலைமை ஆசிரியர் வி. கபிலன், முன்னாள் மாணவர்கள் சங்க பொருளாளர் எஸ். லோகநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் சங்கம் வசதி வாய்ப்பற்ற மாணவ மாணவியருக்கு உதவுதல் பள்ளிக்கு தேவையான அத்தியாவசியமான உபகரணங்கள் வாங்கித் தருவது போன்ற பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர்.