நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் மாணவர் விடுதிகளில் போலீசார் போதை பொருட்கள் பயன்பாடு வெளி ஆட்களின் நடமாட்டம் குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி, தனியார் கல்லூரிகளின் விடுதிகள் போன்றவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன.
ராசிபுரம் காவல்துறை டிஎஸ்பி விஜயகுமார் காவல் ஆய்வாளர் ஜி சுகவனம் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ராசிபுரம் ஆண்டலூர்கேட் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி, காக்காவேரி பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரியின் விடுதிகள் போன்ற இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர் அறைகளில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் உள்ளதா வெளிப்புற நபர்களின் நடமாட்டம், வெளி ஆட்கள் யாராவது தங்க வைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் சோதனை நடத்தினர். மேலும் டிஎஸ்பி விஜயகுமார், காவல் ஆய்வாளர் ஜி.சுகவனம் ஆகியோர் மாணவர்களிடம் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வெளி ஆட்கள் யாரும் விடுதியில் தங்க வைக்கக் கூடாது என்பது குறித்தும் இரவு நேரங்களில் மாணவர்கள் வெளிப்பகுதியில் சுற்றி திரிவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர். மாணவர்களின் தலை முடி சிகை அலங்காரம் போன்றவற்றில் ஒழுங்கு கடைபிடிக்க வேண்டியது அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் ராசிபுரம் உட்கோட்ட பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் மட்டுமின்றி நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி விடுதிகளில் சோதனை நடைபெற்றது. பின்னர் போதை பொருட்கள் பயன்படுத்துவதில்லை என மாணவர்கள் காவல்துறையினர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.