ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கடமைக்கு கூட்ட ஏற்பாடுகள் செய்திருந்த மருத்துவர்களுக்கு டோஸ்…..
மக்களின் சுகாதார நலனை பாதுகாப்பது நமது கடமை என்ற அடிப்படையில் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு மருத்துவர்களும், அரசு அலுவலர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் ச.உமா அறிவுறுத்தினார். ராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளர்கள் நலச்சங்கக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர், முறையாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யாததால் மருத்துவர்களிடம் கடிந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்க அனைத்துத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினருக்கு, நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டிய நிலையில், யாருக்கும் தகவல் கொடுக்காததால் கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை. இதனையடுத்து மருத்துவமனை மருத்துவ அலுவலர் கலைச்செல்வியிடும் கேள்வி எழுப்பினார். அலட்சியமாக இருப்பாத கடுமையாக எச்சரிக்கை செய்தார். மேலும் கூட்டத்திற்கு வராத பிற துறை அலுவலர்களையும் உடனை தொலைபேசியில் அழைக்க உத்ரவிட்டார். இதனையடுத்து அவசர அவசரமாக பல்வேறு அலுவலர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக கூட்டத்திற்கு வந்தனர். இதனை தொடர்ந்து ஆட்சியர் மருத்துவமனையில் உள்ள வசதிகள், வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலரிடம் துருவி துருவி கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் குறைகள் குறித்து கேட்டபோது, சொல்லிக்கொடுத்து கூட்டத்திற்கு அழைத்தவந்தீர்களா என்றும் ஆட்சியர் எதிர் கேள்வி எழுப்பினார்.
அனைவர் முன்னிலையில் இக்கூட்டத்தில் ஆட்சியர் ச.உமா பேசியது:
தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் என்ற உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, திருச்செங்கோட்டில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்ட நிதிஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பொதுமக்களுக்கு உயர் அறுவை சிகிச்சைகள், டயாலிஸிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நோயாளிகள் நல சங்க கூட்டமானது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட உள்ளது. அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் அரசுத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு ஏதுவாக சாய்தளம் மற்றும் கைப்பிடி சுவர் உள்ளிட்டவற்றை முறையாக வைத்திட வேண்டும். மருத்துவமனையில் உள்ள 142 படுக்கை வசதிகள், ரத்த வங்கி, 3 டயாலிஸிஸ் இயந்திரங்கள், ஜென்செட் முறையாக பயன்படுத்திட வேண்டும். காவல்துறையினர் மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். உள் நோயாளிகள், புறநோயாளிகள், கர்ப்பிணி பெண்களின் விபரங்கள், சுகப்பிரசவம் விபரம் பராமரிக்க வேண்டும். நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கும் உறவினர்களுக்கு முறையாக உணவு அளிக்க வேண்டும். மருத்துவமனையின் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் , காப்பீடு திட்டம் குறித்தும் போதிய விழிப்புணர்வுகளை நோயாளிகளுக்கு ஏற்படுத்திடவும் கூட்டத்தில் பேசிய அவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மகப்பேறு மருத்துவரிடம் ஒரு வருடத்திற்கு மேற்கொள்ளப்படும் பிரசவ விபரம், தாய்மார்களின் விபரம், குழந்தைகள் எடை விபரம் குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரம், மருத்துவமனையில் ஆய்வக செயல்பாடுகள், ஆய்வகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு மற்றும் தேவைகள், ரத்த வங்கி இருப்புகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் காச நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் உணவு விபரம், நோயாளர் நலச்சங்க நிதியிலிருந்து நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் செலவு உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
நேரடியாக ஆய்வு:
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சமையலறை, கழிவறை ஆய்வுகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த நோயாளர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறி்ந்தார். இக்கூட்டத்தில் ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர். கவிதா சங்கர், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள் ) அ.ராஜ்மோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.ஜனாகி, துணை இயக்குநர் தொழுநோய் பிரிவு அ.ஜெயந்தினி உட்பட சமூக ஆர்வலர்கள், ரெட் கிராஷ், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனத்தினர் இதில் கலந்து கொண்டனர்.