உணவு பொருளை விற்பனை செய்யும் போது நுகர்வோரின் பெயரையும் காலாவதி தேதியையும் குறிப்பிடாமல் விற்பனை செய்ய தடை விதித்தும் இழப்பீடாக ரூ. 30 ஆயிரம் செலுத்தவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் வசித்து வருபவர் ராமசாமி மகன் ஆறுமுகம் (66). இவர் கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் கோவை சத்தி சாலையில் உள்ள பிரபல தனியார் ஸ்வீட் அண்ட் பேக்கரி கடையில் ரூ .134/- செலுத்தி 200 கிராம் மைசூர்பா வாங்கியுள்ளார். அப்போது அவரது பெயரில் ரசீது தருமாறு கேட்டதற்கு கடையின் பணியாளர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், கடையில் கண்ணாடி பெட்டிக்குள் தட்டில் வைக்கப்பட்டு இருந்த ஸ்வீட்ஸ் எந்த தேதியில் காலாவதி ஆகிறது? என்று குறிப்பிட்டு வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
உணவுப் பொருளை விற்பனை செய்த கடைக்காரரின் செயல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதால் கடைக்காரர் சேவை குறைபாடு புரிந்து விட்டதாக தெரிவித்து இழப்பீடு கேட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் உணவு பொருளை விற்ற கடை மீது ஆறுமுகம் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று (05-11-2024) நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என் லட்சுமணன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பின் விவரம் வருமாறு.
உணவுப் பொருள் விற்பனையாளர் தரப்பில் தங்கள் கடையில் வழங்கப்படும் ரசீதுகளில் நுகர்வோரின் பெயரை குறிப்பிட்டு ரசீது வழங்கும் வழக்கம் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு பொது விதிகளில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு வழங்கப்படும் ரசீது எவ்வாறு இருக்க வேண்டும்? என்று விளக்கப்பட்டுள்ளது. இதன்படி பணம் செலுத்தி பொருளை வாங்கும் நுகர்வோரின் பெயரை குறிப்பிட்டு விற்பனையாளரால் ரசீது வழங்கப்பட வேண்டும். ஆனால், உணவுப் பொருள் விற்பனையாளர் இந்த விதி அமலுக்கு வந்த 2020 ஆண்டிலிருந்து தற்போது வரை பின்பற்றாமல் இருந்து வந்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (food Safety and Standards Authority of India) உத்தரவுப்படி உதிரியாக (loose) இனிப்பு மற்றும் கார வகை உணவுப் பொருட்களை தட்டில் வைத்து விற்பனை செய்யும் போது விற்கப்படும் உணவுப் பொருள் எந்த தேதிக்குள் உண்ண உகந்தது? (best before) என்று எழுதி வைக்கப்பட வேண்டும். உணவுப் பொருள் விற்பனையாளர் தரப்பில் தாக்கல் செய்த கடையில் உள்ள கண்ணாடி பெட்டி (ஷோகேஸ் புகைப்படங்களில் கண்ணாடி பெட்டிக்குள் (ஷோகேஸ்) வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களுக்கு காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய உத்தரவை விற்பனையாளர் மீறியுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வழக்கு தாக்கல் செய்தவருக்கு உணவு பொருளை விற்பனை செய்த கடை நிர்வாகம் 2024 நவம்பர் இறுதிக்குள்ளாக இழப்பீடாகவும் (ரூ 8,000/-) வழக்கின் செலவு (ரூ 10,000/-) தொகையாகவும் ரூ 10,000/- ஐ வழங்கவும் அடையாளம் தெரியாத நுகர்வோர் பாதிக்கப்பட்டு இருப்பதால் நுகர்வோர் நலனுக்காக ரூ 20,000/- ஐ மாநில நுகர்வோர் நிதியத்தில் 2024 நவம்பர் இறுதிக்கு உள்ளாக செலுத்தவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உணவு பொருளை விற்ற கடையில் நுகர்வோரின் பெயரை குறிப்பிட்டு ரசீது வழங்காமலும் உதிரியாக விற்கப்படும் உணவுப் பொருள் வைக்கப்பட்டுள்ள தட்டில் காலாவதி தேதியை குறிப்பிட்டு காட்சிப்படுத்தாமலும் உணவு பொருட்களை விற்க தடை விதித்தும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.