பாவை கல்வி நிறுவனங்களில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் குறித்த சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மக்கள் நாயகனாக திகழ்வதற்கு காரணம், அவர் விஞ்ஞானி என்பதாலா? குடியரசுத் தலைவர் என்பதலா? மனிதநேயர் என்பதலா? என்ற தலைப்பில் நடைபெற்றது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் விழாவில் தலைமை வகித்தார். இதில் நடுவராக பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் முனைவர் இம்மானுவேல் கலந்து கொண்டார்.
இளம் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்
பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி.நடராஜன் விழாவில் பேசுகையில், ‘இந்த பட்டிமன்ற நிகழ்ச்சி மாணவ, மாணவியர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் வாழ்க்கைச் சரித்திரத்தை அறிந்து கொண்டு, அவற்றை தங்கள் வாழ்வில் பின்பற்ற ஒரு வாய்ப்பாக அமையும். ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விஞ்ஞானியாக அணு ஆயுத சோதனையில் வெற்றிபெற்றார். இந்திய விண்வெளி திட்டத்தில் செயற்கைகோளினை விண்வெளியில் வான் சுற்றுப்பாதையில் செலுத்துவதில் வெற்றி பெற்றார். மேலும் ஊனமுற்ற குழந்தைகள் கால்களில் அணியும் எடை குறைந்த மூட்டு கருவியை வடிவமைத்தார். அதுமட்டுமல்லாமல் குடியரசுத் தலைவராகப் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் அவர் விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராக இருந்தாலும் அவரின் மனிதநேய பண்பு எப்பொழுதும் வெளிப்பட்டு கொண்டே தான் இருந்தது. இறுதியாக நம் அனைவராலும் மனிதநேயமுடையவராகப் போற்றப்படுகிறார். இவ்வாறு ஒரு தனிமனிதாின் சிந்தனை அறிவியலிலும், அரசியலிலும் மற்றும் தனிமனித வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை உருவாக்க முடியுமென்றால், மாணவர்களாகிய உங்களாலும் உயர்ந்த மாற்றங்களை உருவாக்க முடியும். அதற்கு உங்களின் உயர்ந்த இலட்சியமும், அதை நோக்கிய உங்களின் தொடர் முயற்சியும் அவசியமானது. உங்களின் 20 வயதிற்குள்ளான லட்சியம் உங்களை நிச்சயம் சாதனையாளராக உருவாக்கும். இதனை கருத்தில் கொண்டு, நீங்கள் சாதனையாளர்காக உயர்ந்து, வரும் இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றார்.