நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில், நடைபெற்ற அவரது 136-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இன்று (19.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், நாமக்கல் மாநகராட்சி மேயர் .து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தெருவில், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவில்லம் அமைந்துள்ளது. நாமக்கல் கவிஞர் புகழையும், நினைவையும் போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின் சார்பில் கிளை நூலகம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் சிறந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் “தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா” என்கிற வீரநடைக்கு வித்திட்டவர் ஆவார். கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் 19.10.1888 அன்று பிறந்தார். அவரது பெற்றோர்கள் வெங்கடராமப்பிள்ளை, அம்மணியம்மாள் ஆவார்கள். இவர் எழுதிய நூல்களில் மலைக்கள்ளன் (நாவல்), காணாமல் போன கல்யாணப்பெண் (நாவல்), பிரார்த்தனை (கவிதை), நாமக்கல் கவிஞர் பாடல்கள், திருக்குறள் புதிய உரை உள்ளிட்டவை முக்கியமானவையாகும். 1912 ஆம் ஆண்டில் 5 ஆம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இவரது ஓவியம் தங்கப்பதக்கம் வென்றது, பன்முகத்திறமை கொண்ட நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் ஓவியத்திறமைக்கு சான்றாகும்.
கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 1932 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் ஆவார். 1971 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருது பெற்றார். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராக ஐந்தாண்டு காலம் விளங்கியவர் ஆவார்.
இந்நிகழ்வில் துணை மேயர் செ.பூபதி, நகர் மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சரவணன், மாநகராட்சி ஆணையாளர் ர.மகேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் ஆகியோர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.