Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்லில் போலியோ விழிப்புணர்வு உலக சாதனை சிலம்பம்

நாமக்கல்லில் போலியோ விழிப்புணர்வு உலக சாதனை சிலம்பம்

ரோட்டரி சங்கம் ஏற்பாட்டில் 3000 மாணவ மாணவியர் ஒரே இடத்தில் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை

நாமக்கல்லில் போலியோ விழிப்புணர்வுக்காக, மாவட்ட ரோட்டரி சங்கம் – 2982 சார்பில் 3000 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற, உலக சாதனை சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போலியோ இல்லாத உலகை உருவாக்கும் நோக்கத்தில் சர்வதேச ரோட்டரி சங்கங்கள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் போலியோ நோய் பரவலாக பல்வேறு நாடுகளில் ஒழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேலும் போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் சர்வதேச ரோட்டரி சங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட வேண்டும் என்ற இயக்கத்தை ரோட்டரி சங்கம் முன்னெடுத்து வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


நாமக்கல் 2982 மாவட்ட ரோட்டரி சங்கங்களின் சார்பில், போலியோ விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட, சிலம்பம் தொடர் பயிற்சி நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக்குட்டை மேடு அருகில் மைதானத்தில் நடைபெற்றது.

ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட் :

துவக்க விழாவில், ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி.சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் குத்துவிளக்கேற்றிப் போட்டியை துவக்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்றவாறு, இடைவிடாது தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுழற்றி சாதனை நிகழ்ச்சிக்கான பயிற்சியில் ஈடுபட்டனர். உலக சாதனை நிகழ்ச்சியாக நடைபெற்ற, இந்த சிலம்பப் போட்டியை ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவன அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அங்கீகார சான்று அளித்தனர்.

நமது பாரம்பரிய கலையான சிலம்பம் குறித்த விழிப்புணர்வு ஏற்படவும், மீண்டும் போலியோ இல்லாத நாட்டை உருவாக்கவும், தற்போது போலியோ இந்தியாவில் மெல்ல தலை தூக்குவதாலும் அதை தடுக்க இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்று ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தங்கள் குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் ஒரு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றியதை பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிலம்ப பயிற்சியாளர்கள், பொதுமக்கள் உள்ளி்டடோர் இதனை பார்வையிட்டனர்.

ரோட்டரி மாவட்ட சிலம்பம் போட்டி திட்டத்தலைவர் எஸ்.சுரேஷ்குமார், செயலாளர் கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், பொருளாளர் கே.செல்வரத்தினம், ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மேன் ஏ.திருமூர்த்தி (எ) ரவி , வல்வில் ஓரி சிலம்பம் அசோசியேசன் தலைவர் பன்னீர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!