நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் ச.உமா, சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் கண்காணிப்பாளர் எஸ்.இராஜேஸ் கண்ணன் ஆகியோர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டனர்.
மேலும், சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்தம் வாரிசுதாரர்களை சிறப்பு செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார். பின்னர், அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக 100 ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.
சுதந்திர தினவிழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.96,011/- மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000/- மதிப்பில் இலவச தையல் இயந்திரம், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.22.91 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.25,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.70 இலட்சம் மதிப்பில் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், தாட்கோ சார்பில் 12 நபர்களுக்கு ரூ.27,000/- மதிப்பில் கல்வி உதவித்தொகை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டைகள் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.27.21 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய 34 காவல்துறை அலுவலர்கள், 224 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 258 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். மேலும் கலைப் பண்பாட்டு துறை சார்பில் 6 கலைஞர்களுக்கு தலா ரூ.20,000/- பரிசு மற்றும் கலைமுதுமணி விருது, 6 கலைஞர்களுக்கு தலா ரூ.15,000/- பரிசு மற்றும் கலைநன்மணி விருது, 6 கலைஞர்களுக்கு தலா ரூ.10,000/- பரிசு மற்றும் கலைசுடர்மணி விருது, 6 கலைஞர்களுக்கு தலா ரூ.6,000/- பரிசு மற்றும் கலைவளர்மணி விருது, 6 கலைஞர்களுக்கு தலா ரூ.4,000/- பரிசு மற்றும் கலைஇளமணி விருது என மொத்தம் 30 கலைஞர்களுக்கு விருது மற்றும் ரூ.3.26 மதிப்பில் பரிசு தொகையினையும் வழங்கினார்.
தொடர்ந்து, எருமப்பட்டி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல், சுரபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரெட்டிப்பட்டி பாரதி அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி, பொரசபாளையம் ஸ்ரீ விநாயகா மேல்நிலைப்பள்ளி, பொம்மம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மாரப்பநாயக்கன்பட்டி ஸ்பைரோ ப்ரைம் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 6 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 674 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட வன அலுவலர் சி.கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்த்தீபன், மாவட்ட வழங்கல் அலுவலர் த.முத்துராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துறைசார்ந்த அலுவலர்கள், அரசுத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், மாணவ, மாணவியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.