நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து இதற்கான அதிகாரபூர்வ ஆணை திங்கள்கிழமை (12.08.2024) வெளியிடப்படுகிறது.

இதனை தொடர்ந்து திங்கள்கிழமை (12.08.2024) முதல் நாமக்கல் நகர்மன்றத் தலைவர் து.கலாநிதி மாமன்றத் தலைவராகிறார். நகர்மன்றத் துணைத் தலைவர் செ.பூபதி மாமன்ற துணைத் தலைவராகிறார். நகர்மன்ற உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினராகிறார்கள். நகராட்சியின் ஆணையாளர் நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராகவுள்ளார். இதற்கான தமிழக முதலமைச்சரிடம் அதிகாரபூர்வ ஆணையை பெறுவதற்காக நகர்மன்றத் தலைவர் து.கலாநிதி, துணைத் தலைவர் செ.பூபதி உள்ளிட்ட சில நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் சென்னை புறப்பட்டு சென்றுள்ளனர். திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடம் இதற்கான ஆணையை அவர் பெற்றுக்கொள்கின்றனர். இதனை தொடர்ந்து நாமக்கல் (மா)நகராட்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.