பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மாற்றுச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சேலம் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி வளாகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளிகளின் தலைவர் என்.மாணிக்கம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் தங்கம் மூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் வி.கே.பழனியப்பன், பொருளாளர் எம்.ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பி.டி.அரசகுமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி களின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து சங்கத்தின் நிறுவனத்தலைவர் பி.டி.அரசகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளில், 3 லட்சத்திற்கும் அதிமான ஆசிரியர்கள், 2 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவருக்கும் கல்வி சட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ரூ.428 கோடி ரூபாயை தமிழக அரசு சமீபத்தில் விடுவித்துள்ளது. அதற்காக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சிறந்த, தகுதிவாய்ந்த 1500 தனியார் பள்ளிகளை தேர்வு செய்து நிரந்தர அங்கீகாரம் வழங்க தமிழக அரசுக்கு அனைத்து சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக அரசு அதை பரிசீலனை செய்து வருகிறது.
பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி பெறுவதில் குளறுபடி உள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு முன் கிராமத்தில் உள்ள பள்ளி கட்டிட அனுமதி பெற்றவர்கள் உள்ளாட்சியில் பெற்றிருந்தால் போதும் என்றும், அதன் பிறகு கட்டிட அனுமதி பெற்றவர்கள் டி.டி.சி.பி. அனுமதி பெற வேண்டும் என்று, 2018 ல் அரசாணை வெளியிட்டுள்ளனர். இது முரண்பாடாக உள்ளது. இதில், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் உள்ள கட்டிடங்கள் என்று பிரித்து கூறவில்லை.
இதே போல் மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் எந்த பள்ளியிலும் சேர்க்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றால் மாணவர் குறித்த விபரங்கள் பள்ளியில் இல்லாமல் போய்விடும். முக்கியமாக தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தேவையில்லை என்பது ஆபத்தானது. எனவே பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு மாற்று்சசான்றிதழ் கட்டாயமாக்க வேண்டும். அதேபோல், மெட்ரிக் பள்ளியில் இருந்து சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு மாற்றுவதை எளிமையாக்க வேண்டும் என்றும் இவ்வாறு கூறினார். இக்கூட்டத்தில் கஸ்தூரிபாகாந்தி கல்வி நிறுவனங்களின் தலைவர் க.சிதம்பரம், ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளிகளின் செயலர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.