நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் திம்மநாயகன்பட்டி, மங்களபுரம், முள்ளுகுறிச்சி, ராஜபாளையம் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 512 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இதற்கான விழாவில் பங்கேற்ற அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தொடர்நது பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். கல்வி செல்வம் ஒன்றே ஒருவரின் வாழ்க்கை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் நலன் கருதி மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறார். மேலும், மாணவர்களுக்கு ரூ.1,000/- வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். அரசுப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயில 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு, பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இது போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி, நன்றாக கல்வி பயின்று தாங்கள் பயின்ற பள்ளிக்கும், தங்கள் பெற்றோருக்கும் நம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்றார். முன்னதாக விழாவில் 50 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கப்பட்டன. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசுவாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.