சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுத்துறை விளையாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரிகளுக்கிடையே பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த துறையின் சார்பில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் மொத்தம் 19 மண்டலங்களில் நடத்தப்பட்டன. இதில் பாவை பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மண்டல அளவில் 610 புள்ளிகள், மாநில அளவில் 580 புள்ளிகள் பெற்று மண்டல அளவிலும், மாநில அளவிலும் முதலிடத்தை பெற்றனர்.
2023 – 24 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் பாவை பொறியியல் கல்லூரி மண்டல அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் 610 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர். மேலும் மண்டலங்களுக்கிடையேயான, மாநில அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று 580 புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் நபி மொஹம்மது ரியாஸ் பங்கேற்று கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கினார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் விழாவில் கலந்து கொண்டு சேம்பியன்ஸ் ஆப் சேம்பியன் கோப்பையினை பெற்றுக் கொண்டார். விளையாட்டிற்காக அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் பாவை பொறியியல் கல்லூரி தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
பரிசளிக்கும் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத்தலைவர் பி.அசோக் சிங்கமணி , அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பதிவாளர் ஜெ.பிரகாஷ், விளையாட்டுதுறைத் தலைவர் என்.செந்தில்குமார், அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு துறையைச் சார்ந்தோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கைநடராஜன், இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி, கல்லூரியின் முதல்வர் எம்.பிரேம்குமார், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும், பயிற்றுநர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் என்.சந்தானராஜா உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்தனர்.