நாமக்கல் நகரில் இருந்து மாற்றப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அதே இடத்தில் நகர்புற சுகாதார மையமாக அனைத்து வசதிகளுடன் செயல்படும் என்பதால் போராட்டம் அறிவித்துள்ள மீட்புக்குழுவினர் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி்., தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராசிபுரம் நகரில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார்: அப்போது அவர் கூறியது:
நாமக்கல் நகரில் செயல்பட்டு வந்த மாவட்ட தலைமை மருத்துவமனை, நாமக்கல் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு போதிய குடிநீர் வசதி இல்லாமல் செயல்படாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சி அமைந்த பிறகு ரூ.6 கோடி செலவில் காவிரி நீர் கொண்டுவரப்பட்டு திட்டம் செயலாக்கம் செய்யப்பட்டு அந்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு குடிநீர் சீர் செய்யப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே மோகனூர் சாலையில் செயல்பட்டு வந்த மாவட்டத் தலைமை மருத்துவமனை மாற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து அங்கு ஒரு மருத்துவமனை வேண்டும் என கோரிக்கை வந்த நிலையில், நகர மக்கள் வசதிக்காக கருத்தில் கொண்டு முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நகர சுகாதார நிலையம் சில நாட்களில் தொடர்ந்து செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி நிதியில் 60 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவமனை வளாகம்:
அந்த மருத்துவமனை கட்டிடத்தில் 60 படுக்கை வசதி கொண்ட சித்த மருத்துவமனைக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு செயல்படும். இப்பணியும் விரைவில் துவங்கும். இந்த மருத்துவமனை தொடர்பாக மருத்துவமனை மீட்புக்குழு போராட்டம் அறிவித்துள்ளது. இந்த மருத்துவமனை கட்டிடடத்தில் மேம்பட்ட சுகாதாரம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவர்கள் வசதியுடன் அனைத்து வசதிகள் கொண்டு சில நாட்களில் செயல்படும் வகையில் துவக்கி வைக்கப்படும். எந்த சூழலிலும் அது பாதுகாக்கப்படும் என்றார். இது தொடர்பாக போராட்டம் அறிவித்துள்ளவர்கள் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் உயர்தர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதி நிதியில் இருந்தும் நிதி ஒதுக்கப்பட்டு முழு வசதிகள் செய்து தரப்படும் என்றார்.