Wednesday, February 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: வெண்ணந்தூர், அத்தனூர், சிங்களாந்தபுரம் பகுதியில் ஆட்சியர் வீடுகள் தோறும்...

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: வெண்ணந்தூர், அத்தனூர், சிங்களாந்தபுரம் பகுதியில் ஆட்சியர் வீடுகள் தோறும் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூர், சிங்களாந்தபுரம் போன்ற குடியிருப்பு பகுதியில் உள்ள தொட்டிகள், நீர் தேங்கியுள்ள இடங்களில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யக்கூடிய லார்வா புழுக்கள் உள்ளனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து கொசு மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க, நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பருவமழை காலம் தொடங்க உள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் ஊராட்சி பகுதிகளில் 20 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், பேரூராட்சி பகுதிகளில் 10 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், நகராட்சி பகுதிகளில் வார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு, தொற்றுநோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து டெங்கு ஒழிப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்டம் நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்து கண்காணிப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் உள் நோயாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. ராசிபுரம் பகுதியில் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதால் இன்றைய தினம் இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளபட்டுள்ளது. மேலும், உள் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு டெங்கு ஒழிப்பில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் போன்றவை இருப்பின் அவற்றில் மழை நீர் தேங்காத வகையில் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை மூடி வைத்து உபயோகிக்க வேண்டும்.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த வாரம் 2 நபர்களுக்கு டெங்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இருப்பினும் பருவ மழை காலம் தொடங்க உள்ளதால் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர்கள்செல்வி, பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!