நாட்டின் சுதந்திரப் போராட்ட காலங்களில் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகத் தலைவர்களின் வரலாற்று மறக்கக்கூடாது என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான., டாக்டர் கே.பி.ராமலிங்கம் குறிப்பிட்டார்.
விடுதலை களம் கட்சியின் சார்பில் சுதந்திரப் போராட்டத் தியாகி ராசிபுரம் டாக்டர் பி.வரதராஜூலுநாயுடுவின் 67-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பாக செவ்வாய்க்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பழனிசாமி வரவேற்றார். இக்கூட்டத்தில் பத்து ரூபாய் இயக்கத்தின் பொதுச்செயலர் நல்வினை விஸ்வராஜூ பங்கேற்று, மருத்துவராக இருந்த அவர்,தேசத்தின் விடுதலைக்காக நடத்திய பல்வேறு போராட்டங்கள், தொழிற்சங்க மாநாடுகள், தாழ்த்தப்பட்டோருக்கான போராட்ட வரலாறு, பத்திரிகையாளராக இருந்து ஏற்படுத்திய எழுச்சிகள், தேசத்திக்காக அவர் இழந்த சொத்துகள் போன்றவற்றை நினைவு கூர்ந்து பேசினார். இதில் பங்கேற்ற தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன், பசும்பொன் தேவரும், டாக்டர் வரதாஜூலுவும் தென் மாவட்டங்களில் நடத்திய போராட்டங்களை நினைவுபடுத்திப் பேசினார்.

இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான., டாக்டர் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றுப் பேசியது:
டாக்டர் வரதராஜூலுநாயுடு சேர்த்து வைத்த சொத்துக்களையெல்லாம் தேசத்துக்காக செலவிட்ட மாபெரும் மனிதர். இவரது வரலாற்று பதிவுகளை இங்கு எடுத்துச்சொன்னார்கள். அவரது உழைப்பு, தியாகம் குறித்து பேசினர். ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்கு முன்பு 1980-ம் ஆண்டு எம்ஜிஆரால் ராசிபுரம் தொகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு எம்எல்ஏ., வேட்பாளராக நான் மக்களை சந்தித்த அந்த காலம் முதல் இன்று வரை எத்தனையோ முறை இது போன்ற மேடைகளில் பேசியிருக்கிறேன். அன்றைக்கு இல்லாத மகிழ்ச்சி இன்று வரதராஜூலுநாயுடு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் தியாகிகளை நினைவு கூறுவது அரிதாகிவிட்டது. இந்த நாடு 1949-க்கு பின் தான் பிறந்தது போல் வரலாற்று புதினங்களில் திருத்தங்களை செய்து கொண்டுள்ளது. ஆட்சியாளர்களும் சரி, அவர்களுடானவர்களும் சரி வரலாற்றை திருப்பி திருப்பி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக பாடப்புத்தகங்களில் கூட சுதந்திரப் போராட்ட தியாகிகள் மறைக்கப்படுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் அவர்களது வரலாறு திருத்தப்படுகிறது. ஆவணக்குறைப்பு ஏற்படுத்தப்படுகிறது. தியாகிகளை மறப்பதும், மறைப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, விடுதலை களம் நடத்தும் இந்த நிகழ்ச்சி தொடக்க நிகழ்ச்சியாக இருக்கட்டும். விடுதலை களம் என்ன கேட்கிறது. வரதராஜூலுவிற்க்கு நினைவு சின்னம், மணி மண்டபம் கேட்கிறது. இதிலென்ன தவறு. அவருடைய வரலாறு நாயுடு இனத்தவர் என்பதால் அந்த சமுதாயத்திற்கு மட்டும் சொந்தமானவரல்ல. அவர் ராசிபுரம் நகரை சேர்ந்தவர் என்பதால் ராசிபுரத்துக்கு மட்டும் சொந்தமானவரல்ல. தமிழகத்தில் வாழ்ந்ததால் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமானவரல்ல. சுதந்திரப் போராட்டத்தில் நாட்டிற்கே வழிகட்டியவர் என்பதால் தேசமே கொண்டாடப்படவேண்டிய தலைவர் அவர். வ.உ.சிதம்பரனார் எழுதிய டாக்டர் வரதராஜூலுநாயுடுவின் சுய சரிதம் குறித்த புத்தகம் தேசிய சங்கநாதம் என்ற பெயரில் வந்தது. இந்த புத்தகத்தை ஆங்கியே அரசு தடை செய்து வைத்திருந்தது. ஒரு வரலாற்றுத்தலைவரை பற்றி மற்றொரு வரலாற்றுத் தலைவர் புத்தகம் எழுதியுள்ளார் என்றால் வரதராஜூலு எத்தகைய ஆளுமைப் பெற்றவர் என்பது புரியும்.
நல்ல காரியங்கள் தான் வரலாற்றில் இடம் பெறும்:
இவரது வரலாறு வெறும் பதவிகளின் வரலாறு அல்ல. பதவிகள் வரலாறாக மாறாது. ஒரு மனிதர் செய்யும் நற்காரியங்களால் இருந்து தான் வரலாறு கிடைக்கும். மாமனிதன் வாழ்க்கை தான், ஒரு மனிதனில் வரலாறாக மாறும். தற்கால சூழலில் இத்தகைய தியாக வாழ்வு வாழ்வதற்கு நமக்கே பிடிப்பில்லை. அதற்கு நிறைய காரணம் உளளது. அரசு என்ன திட்டங்கள் கொடுத்தாலும் பெற்றுக்கொண்டு மறந்து விடுகிறோம். தேர்தல் நேரத்தில் பெறும் பணத்திற்கு மட்டும் மதிப்பளிக்கிறோம். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து என்ன பயன். தேர்தல் நேரத்தில் பெறும் பணத்தால் அதனையும் மறந்து விடுகின்றனர். சமுதாயமே அதனை மறந்து விட்டதால், ஆட்சியில் இருப்பவர்களும் அதனை மறைக்கப்பார்க்கின்றனர். வரதராஜூலுநாயுடு போன்ற தியாகிகள் வாழ்ந்த மண்ணில் இன்று கமிஷனுக்காகவும், அடு்ததவன் பணத்துக்காகவும், மனசாட்சியின்றி வேலை செய்கின்றனர். ஆனால் இன்றைக்கும் இது போன்றவர்களால் அவரது நினைவு போற்றப்படுகிறது என்றால், அவரது தியாகம் தான் காரணம். பெரியார், காமராஜருக்கே தலைவர், எனக்கு தலைவன் எனபவர் ஒன்று உண்டு என்றால் அது டாக்டர் வரதராஜூலு நாயுடு தான் என காமராஜரே தெரிவித்துள்ளார். அப்படிபட்ட மகத்தான தலைவர்.
இன்று வாக்கு அரசியல் செய்வதற்காக தேசத்துக்கு உழைத்தவர்களை மறக்கக்கூடாது என ஆட்சியாளர்களை எச்சரிக்கை செய்கிறேன். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கொள்கை, லட்சியம், கட்சி பிடிப்புகள் மட்டும் கொண்டு ஆளக்கூடாது. இந்த தேசம் எத்தகைய மாமனிதர்கள் பெற்றோம் என்பதனை எண்ணி பார்க்க வேண்டும். அவர்களின்வரலாற்றை ஏன் மறைக்கிறீர்கள். ஏன் மறுக்கிறீர்கள். இது போன்றவர்களின் வரலாற்றை மறைத்துவிட முடியாது. தேசத்தின் வரலாற்று மறைக்க முயல்பவர்கள் வரலாறு நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. தியாகத் தலைவர்களின் வரலாற்றை நினைவு கூற வேண்டும். டாக்டர் வரதராஜூலு நாயுடுவிற்கு மணி மண்டபம் அமைக்க இடம் ஒதுக்குவதும், சிலை அமைக்க இடம் ஒதுக்கும் பொறுப்பும் நகராட்சிக்கு உள்ளது என்பதனை உணரவேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை விடுதலை களம் கட்சி எடுக்க வேண்டும். இதற்கு நாம் உடன் இருப்போம். டாக்டருக்கு அடுத்த ஆண்டுக்குள் அஞ்சல் தலை வெளியிடுவதற்கு மத்திய அரசிடம் சொல்லி அஞ்சல் தலை வெளியிட உறுதியளிக்கிறேன் என்றார். கூட்டத்தில் மாநிலப் பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் பெரியூர் பூபதி, வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வசந்தாமணிராஜேந்திரன், தொட்டியப்பட்டி ப.சிவக்குமார், திருச்சி மாவட்டச் செயலர் என்.கண்ணன், கரூர் மாவட்டச் செயலர் ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கட்சியின் நாமக்கல் நகரச் செயலர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.