நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர மன்றக் கூட்டத்தில் பேருந்து நிலையம் மாற்றி அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர், வணிகர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஜூலை.18-ல் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு் போராட்டம் நடந்தது.

இதே போல் மக்கள் நலக்கூட்டணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்திட முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து சனிக்கிழமை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்றோர் பேருந்து நிலையம் மாற்றும் முயற்சிக்கும், அணைப்பாளையம் பகுதியை தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமெழுப்பினர்.

முன்னதாக இந்த மனித சங்கிலி போராட்டத்தில், ஒய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் ஆர்.எம்.தங்கவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஜெயக்குமார் வெள்ளைய்யன் போராட்டத்தை துவக்கி வைத்தார். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்கத் தலைவர் க.சிதம்பரம், பத்து ரூபாய் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்வினை விஸ்வராஜூ ஆகியோர் பங்கேற்றுப் பேசினார். இதில் பேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்கத் தலைவர் க.சிதம்பரம் , பேருந்து நிலையம் ஆண்டகளூகேட் பகுதியில் இருக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.
ஆகஸ்டு 15-ல் சாலை மறியல் போராட்டம்:
மேலும் சிலர் நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யும் நகர்மன்றத் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும், இடமாற்றும் எண்ணத்தை கைவிட வேண்டும். இல்லையெனில் சுதந்திர நாளன்று ஆக.15-ல் தேசியக்கொடியுடன் பங்கேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். மக்கள் நலக்குழுவின் தலைவர் வி.பாலு, செயலர் நல்வினை செல்வன், பொருளாளர் முருகன், பாஜக மாவட்ட பொதுச்செயலர் வி.சேதுராமன், வழக்கறிஞர் பாச்சல் ஏ.சீனிவாசன், நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாஷ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொருளாளர் ஜெ.சபீர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், சங்கத்தினர் திரளாக இதில் பங்கேற்றனர்.