நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பஸ் நிலையம் மாற்றம் விவகாரத்தில் அரசு மீதும், நகர்மன்றத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் மீதும் பொதுமக்களிடம் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் குறிப்பிட்டார்.
ராசிபுரம் நகரில் செயல்பட்டு வரும் பஸ் நிலையத்தை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு இதற்கான தீர்மானம் நகர்மன்றத்தால் கடந்த ஜூலை.5-ல் நடைபெற்ற கூட்டத்தில் நி்றைவேற்றப்பட்டு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டது. மேலும் அணைப்பாளையம் பகுதியில் தனியாரிடம் 7 ஏக்கர் நிலம் தானமாக பேருந்து நிலையம் அமைக்க நகராட்சியால் பெறப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் முடிவை பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து நகரில் ஜூலை.18-ல் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும் மனித சங்கிலி, உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், வெள்ளிக்கிழமை நகர்மன்றக் கூட்ட அரங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தால் நகர சாலைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சீரழிந்த நிலையில் இருந்தது. இதன் பின்னர் ராசிபுரம் நகர்மன்றத்தால் கடந்த 28 மாதத்தில் எண்ணற்ற திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராசிபுரம் நகரில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் கூட்டு குடிநீர் திட்டம், 56 கி.மீ.சுற்றளவுக்கு சாலைப்பணிகள், எல்இடி மின் விளக்குகள், சாக்கடை தூர்வாருதல், பொழுது போக்கு பூங்கா, சுகாதார வசதிகள், நகர்புற நலவாழ்வு மையம், தினசரி சந்தை, வாரச்சந்தை கட்டிடம், மேல் நிலை நீர்தேக்கத்தொட்டிகள், கோனேரிப்பட்டி ஏரி சீரமைப்பு, பழைய பேருந்து நிலையத்தில் ஈரடுக்கு வணிக வளாகத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் என கொண்டுவரப்பட்டுள்ளன.
மக்கள் கோரிக்கை ஏற்று பேருந்து நிலையம் மாற்றம்:
இந்நிலையில் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை, மக்கள் தொகை வளர்ச்சி, போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 34 ஆண்டுகள் பழமையான பேருந்து நிலையம் மாற்றம் செய்ய நகர்மன்றத்தால் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வரை அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதில் தமிழக அரசும், நகராட்சி இயக்குனரகமும் தான் எந்த இடத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்பதை ஆ்யவு செய்து முடிவு செய்யும். இதுவரை அரசிடம் இருந்து இது தொடர்பாக எந்த தகவலும், பதிலும் இல்லை. இந்நிலையில் போராட்டம் என்பது தேவையற்றது.
ஆதராங்களை வெளியிடவில்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை
ஆனால் இந்த பிரச்சனையில் அரசின் மீதும், நகர்மன்றத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் மீதும் எதிர்கட்சியினர் சிலர் பொதுமக்களிடமும், ஊடகங்களிலும் தவறான தகவல் பரப்பி வருகின்றனர். மேலும் தேவையற்ற கடையடைப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை அவர்களால் சொல்லமுடியுமா? தற்போதைய ஆட்சியில் 28 மாதத்தில் நகர்மன்றத்தால் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. எதிலும் குற்றம் சாட்டமுடியாத நிலையில், பொதுமக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் நகர்மன்றத் தலைவரும், உறுப்பினர்களும் சுய லாப நோக்கில் நிலம் பெற்றுக்கொண்டு பஸ் நிலையம் மாற்றம் செய்யப்படுவதாக ஊடகங்கலில் முற்றிலும் தவறான தகவல்களை கூறியுள்ளனர். ஊடகங்களில் எதிர்கட்சியை சேர்ந்த சிலர் தெரிவித்தபடி 15 நாட்களில் தங்களிடம் உள்ள ஆதாரத்தை வெளியிட வேண்டும். இல்லையெனில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாரபத்திரிக்கை ஒன்றில் என்னிடம் பேட்டி ஏதும் கேட்காமலேயே நான் கூறியதாக என் கருத்தை வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் தவறானதாகும். வாரப்பத்திரிகையும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதில் கூறியுள்ளபடி ஆதாரத்தை வெளியிட வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் தெரிவித்துள்ளார். நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.