ராசிபுரம் அருகே தான் 70 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய பள்ளியை பார்வையிட்டு தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டுள்ளார் 90 வயதான பள்ளியின் முன்னாள் ஆசிரியர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள நெ.3 கொமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் க.வை.ராமகிருஷ்ணன் (90). 1954-ம் ஆண்டு காமராஜர் முதலமைச்சராக இருந்த போது, ஒராசிரியர் பள்ளிகளை துவங்கிட உத்தரவிட்டிருந்தார். அப்போது ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த சேலம் நிலவாரப்பட்டியில் தொடக்கப்பள்ளியை துவங்க அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது அந்த ஊரின் மாரியம்மன் கோவில் வளாகத்தில் தட்டி கட்டி பள்ளி துவங்கப்பட்டது. அப்பள்ளியின் ஒராசிரியராக நியமிக்கப்பட்டு பணியாற்றியவர் க.வை.ராமகிருஷ்ணன். அப்போது 65 மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயின்று வந்தனர்.பின்னர் க.வை.ராமகிருஷ்ணன் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு அரசு பணிக்கு சென்று விட்டார். தற்போது 90 வயதான அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியரான க.வை.ராமகிருஷ்ணன், பள்ளியை பார்க்க குடும்பத்தினரிடம் விருப்பம் தெரிவித்தார். இதனையடுத்து அவரை நிலவாரப்பட்டி அழைத்துச்சென்று, மாரியம்மன் கோவில் வளாகத்தில் பள்ளி செயல்பட்ட இடத்தையும், தற்போது பள்ளி செயல்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தார். அங்கு தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, அவரது 70 ஆண்டுகளுக்கு முந்தைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் மனமகிழந்த அவர், தான் எழுதிய சிறுகதை புத்தகத்தை அங்குள்ள ஆசிரியர்களுக்கு வழங்கினார்.