நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கட்டிடத் தொழிலாளி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். வெள்ளக்கல்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி ( 57) கட்டிடம் மேஸ்திரி ஆக பணியாற்றி வந்தார். இவர் குடம்பத்துடன் இல்லாமல் தனியாக குடியிருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக வேலைக்கு சேலம் சென்று வந்து கொண்டிருந்த இவருக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் காய்ச்சல் அதிகரிக்கவே மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனி்யார் மருத்துவமனையிலும் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு அங்கு ரத்தப்பரிசோதனை மேற்கொண்டதில் ஸ்கார்ப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சலால், டெங்கு காய்ச்சலும் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனையில் மேல் கிசிச்சைக்கு சென்ற அவர், அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து கந்தசாமி குடியிருந்து வந்த நாமகிரிப்பேட்டை வார்டு 1, 2 ஆகிய பகுதிகளில் சுகாதாரத் துறையினர் சனிக்கிழமை வீடுகள் தோறும் மருத்து தெளித்தும், முகாம் அமைத்தும் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர்.

கொசு மருந்து தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடு வீடாக சென்று வாலி, பேரல், பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ள தேங்கிய நீர்களை கீழே ஊற்றியும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த கந்தசாமி துணைக்கு யாரும் இல்லாமல் தனிமையில் இருந்த நிலையில், முறையான சிகிச்சை மேற்கொள்ளாததால், நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக துணை இயக்குனர் (சுகாதாரம்) கே.பூங்கொடி தெரிவித்தார். மேலும் நோய் பாதித்த பகுதியில் தடுப்பு நடவடிக்ககள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.