ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்ய நகர்மன்ற தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என நகர அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்வது குறித்து நகர்மன்றம் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனையடுத்து பல்வேறு சங்கங்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நகாராட்சியில் நடத்தப்பட்டது. இந்த இடமாற்றும் முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கி.சேகரிடம் ராசிபுரம் நகர அதிமுக செயலர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் கூட்டணி கட்சியினர் நேரில் சந்தித்து வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

இதில் கூறப்பட்டுள்ளதாவது: பேருந்து நிலையம் மாற்றம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பல்வேறு அமைப்பினரை அழைத்து ஆளும்கட்சியினரால் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளை அழைத்து கேட்கவில்லை. ராசிபுரம் நகரை சுற்று தற்போது புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி,கல்லூரி பேருந்துகளும் புறவழிச்சாலையில் இயக்கப்படுகின்றன. மேலும் பேருந்து நிலையத்தில் இருந்து டிவிஎஸ் சாலை, கிருஷ்ணா தியேட்டர் வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் வாகன நெரிசல் குறைந்துள்ளது. பேருந்து நிலையம் முதல் தட்டாங்குட்டை வழியாக அணைப்பாளையம் வரை சாலை அமைத்தாலோ போதுமானது. பேருந்து நிலையம் மாற்றம் என்பது தேவையில்லாதது. மாற்றம் செய்வதால் நகர மக்களும், வர்த்தகர்களும், தொழிலும், பாதிக்கும். மேலும் நில, கட்டிட மதிப்பு குறைந்து அனைவரும் பாதிக்கப்படுவர். மேலும் பஸ் நிலையம் எந்த இடத்திற்கு மாற்றப்படும் என்பதை இதுவரை குறிப்பிடவில்லை. எனவே இந்த முடிவை கைவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனு அளிக்கும் நிகழ்வில் அதிமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.