கைபேசி போன்ற நவீன தொழில்நுட்பங்கள் நல்லவைக்கு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மாணவர்கள் நல்லவைக்கு மட்டுமே ஆக்கப்பூர்வமானதாக பயன்படுத்தினால் சமுதாயத்தில் மாற்றம் உருவாகும் என பாவைக் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் குறிப்பிட்டார்.
நாமக்கல் புதுசத்திரம் அருகேயுள்ள பாவை பாலிடெக்னிக் கல்லூரியின் 2024-25-ம் கல்வியாண்டின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் வி.நடராஜன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் முதன்மையர் (ஆலோசனை) ஜெயலெட்சுமி வரவேற்றுப் பேசினார். தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
பின்னர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் வி.நடராஜன் வகுப்புகளை தொடங்கி வைத்து பேசுகையில், கல்வியானது,சமுதாய அடிமைத்தனத்திலிருந்து விலகி, விழிப்புணர்வுடன் செயல்பட உதவும். ஏனென்றால் கல்வியறிவின்மையும், அறியாமையுமே சமுதாய குற்றங்களுக்கு காரணமாக அமைகின்றன. மாணவர்கள் கல்வியறிவினையும், ஒழுக்கத்தினையும் அடிப்படை குணநலன்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கல்வியே, உங்களுக்கு பகுத்தறியும் திறனையும், சுய முன்னேற்றத்தையும் வழங்கும். மேலும் உங்கள் துறை சார்ந்த கல்விக்கு ஏற்றாற் போல், உங்கள் நடை, உடை எல்லாவற்றிலும் கம்பீரத்துடன் செயல்பட வேண்டும். இவைகளை நீங்கள் பின்பற்றும் போது, உங்களை நீங்களே நிர்வகிக்கும் ஆற்றல் படைத்தவர்களாக உருவாக முடியும். இதனோடு உங்கள் அலைபேசியை நல்லதிற்காக மட்டும் பயன்படுத்தி, தேவையில்லாதவற்றை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தொழில்நுட்பம் என்பது, மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்காக மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகும். இதற்கேற்றவாறு நீங்கள் செயல்பட்டால் உங்களிடம் மாற்றமும், சமுதாய முன்னேற்றமும் உருவாகும் என்று பேசினார்.
தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் தனது பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர். இறுதியாக பாவை பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கௌதம் நன்றி கூறினார்.
இவ்விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குனர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி , இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், உள்ளிட்ட பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.