கள்ளக்குறிச்சி பகுதியில் விஷச்சாரயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தினர் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்து, கள்ளச்சாராயம், மது ஒழிப்பு விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கள்ளச்சாராயம், மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் நடந்த இந்த பேரணியானது ராசிபுரம் கடைவீதி வழியாக ஊர்வலமாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணிக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ஜெ.ஜெ.செந்தில் நாதன் தலைமை வகித்தார். இதில் கட்சியினர் பலரும் கலந்து கொண்டு கள்ளச்சாராயம், மது ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து பழைய பஸ் நிலையம் முன்பாக கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி மது ஒழிப்புக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.