நாமக்கல் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், பொதுமக்கள், செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதற்கும், மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கும் மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. எந்திரங்கள் பயன்படுத்தியே சுத்தம் செய்ய வேண்டும் மீறினால் 2 ஆண்டு சிறை, 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி அமைப்புகளில் சாக்கடைகள் மற்றும் கசடு கழிவுநீர் தொட்டிகள் மேலாண்மை தொடர்பான அபாயகரமானவற்றை நீக்குவதை கண்காணிப்பது குறித்த மாவட்ட துப்புரவு ஆணைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஜூன்.18-இல் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கசடு கழிவு நீர் அகற்றும் பணியில் மனிதர்கள் உள்ளே இறங்கி பணி மேற்கொள்வதை தடுக்கவும் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்வதை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கசடு மற்றும் கழிவு நீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் மனிதர்கள் உள்ளே இறங்கி சுத்தம் செய்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. கசடு கழிவு நீர் அகற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய பயிற்சி பெற்ற பணியாளர்களையே ஈடுபடுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. இயந்திரங்கள் மூலமாக செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வேண்டும். கழிவு நீர் அகற்றும் பணியில் அபாயம் ஏற்பட்டால், அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண் 14420 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பணியில் முறைசாரா தொழிலாளர்கள் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து முறைபடுத்தி, இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டப்படி மனிதர்களை கொண்டு கைகளால் கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மீறப்படும் குற்றங்களுக்கு ஜாமீனில் வர அனுமதி கிடையாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் அல்லது கழிவுநீர் தொட்டியை ஈடுபடுத்தக் கூடாது. இதை முதல் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். 2வது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி அதன் காரணமாக அப்பணியாளர்கள் இறக்க நேரிட்டால், சம்மந்தப்பட்ட நபர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கழிவு நீர் அகற்றும் உரிமையாளர்கள், பணியாளர்கள் பணியின் போது கையுறை, தலைக்கவசம், கண் கண்ணாடி. முகக்கவசம், முழு உடல் பிரதிப்பலிப்பு ஆடை, பாதுகாப்பு காலணிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். ஆறுகள், குளம், கழிவுநீர் வடிகால்கள், திறந்தவெளி இடங்கள், பாதாள சாக்கடை தொட்டி ஆகியவற்றில் கழிவு நீர் கொட்டக்கூடாது. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவு நீரை கொட்ட வேண்டும். பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் செப்டிக் டேங் சுத்தம் செய்ய பொது மக்கள் 14420 என்ற உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச.உமா தெரிவித்தார்.