நாமக்கல் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் தங்கராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நாமக்கல் மாவட்ட ரயில் உபயோகிப்பார்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். வணிகர்கள் இயன்றவரை ரயிலில் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ரயில் நிலைய வசதிகளுக்காக நிறைய சலுகைகளையும், புதிய வழிதடங்களையும் ரயில்வே நிர்வாகத்திடம் நாம் கேட்டுப்பெற முடியும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, நாமக்கல் வழியாக வந்தே பாரத் ரயில் போக்குவரத்து இயக்கப்படும்போது நாமக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கோருவது, விரைவில் தொடங்கவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு ரயில் வரும் நேரங்களில் பேருந்துகளை இயக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை வலியுறுத்துவது, ரயில் பயன்பாட்டை அதிகரிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் மரக்கடை அருண்குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட ரயில் உபயோகிப்பார்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.