நவீன டிஜிட்டல் முறைக்கு வங்கி பண பரிவர்த்தனை மாறியத்திலிருந்தே மக்களை ஏமாற்றி ஆன் லைன் முறையில் பணம் பறிக்கும் செயல் நடந்து வருவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசும், வங்கி விவரங்கள், OTP போன்ற விவரங்களை யாருக்கும் சொல்ல வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார், வங்கியாளர்கள் பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆசிரியர்களின் கோடை விடுமுறை என்ற நடைமுறையை இல்லாமல் ஆக்கிட வேண்டும் என கல்வித்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவு ஆசிரியர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் பெற்றோர்களுக்கு சென்று சேர்ந்து விட்டதா? என்பதை OTP மூலம் உறுதி செய்யும் பணியை செய்யச் சொல்லி தற்போது புதிய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே நலத்திட்டங்கள் அனைத்தும் அமைச்சுப் பணியாளர்களால் மேற்கொள்ளப்படக்கூடிய ஒன்றாகும். ஆனால் OTP மூலம் சரிபார்க்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என வாய்மொழி உத்தரவை பிறப்பிக்கப்பட்டதோடு அப்பணியை காலையிலும், மாலையிலும் மட்டுமே செய்ய வேண்டும் எனவும், மதிய வேலைகளில் பெற்றோர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். இந்த OTP தொடர்பாக அலைபேசியில் பேசிய கல்வி அதிகாரி ஒருவரை பெற்றோர் ஒருவர் சரமாரியாக கவனித்தும் உள்ளார். இத்தனைக்கு பிறகும் OTP சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு தொடர்கிறது. இது ஆசிரியர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கும் கோடை விடுமுறை என்பது நாட்டின் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவதுதான். இந்த விடுமுறை என்பது ஆசிரியர் சமுதாயத்துக்கும் சேர்த்து தான். ஆனால் தற்போது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இதற்கு வேட்டு வைப்பது போல் செயல்படுகின்றனர். ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்களுக்கும் ஈட்டிய விடுப்பில் வித்தியாசம் உண்டு என்கிற விதிகளையெல்லாம் இவர்கள் மதிப்பதே இல்லை.
அவ்வப்போது கோடை விடுமுறையில் பயிற்சி என அறிவிப்பதும். பிறகு ரத்து என்றும் குழப்பினர். மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை செய்யும் காலங்களில் பள்ளிகளில் கலைத்திருவிழா போன்ற ஏதேனும் நிகழ்வுகளை நடத்திவிட்டு மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என்பதற்காக, தேர்வு முடிவுகள் வந்த பின்பு அவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ள சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என தெரியவில்லை. நான் முதல்வன் திட்டம் – உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி என காரணம் காட்டி கோடை விடுமுறையிலும் ஆசிரியர்களை அடிக்கடி பள்ளிக்கூடத்திற்கு வரவழைக்கின்றனர்.
சென்ற ஆண்டில் கோடை விடுமுறையில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்படுமென அறிவித்து வரவழைத்தார்கள். அது பிரச்சனையாகியதால், இந்த ஆண்டு வாய்மொழி உத்தரவின் மூலம் காரியம் சாதிக்கிறார்கள். இந்த ஆண்டு 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி முடிக்கும் போதே மே மாதம் 5ஆம் தேதியை நெருங்கி விட்டது. தொடர்ந்து 6ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதற்காகவும், அதைத்தொடர்ந்து நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு, மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் என ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்ததோடு, EMIS வலைதளத்தில் ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்யவும் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார்கள்.
பின்னர் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், அது தொடர்பான பணிகள். தொடர்ந்து நான் முதல்வன் – உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிக்கான பயிற்சி என தொடர்ந்து ஆசிரியர் பெருமக்கள் கோடை விடுமுறையிலும் பள்ளிக்குச் சென்று கொண்டுள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் தற்பொழுது சென்ற கல்வி ஆண்டில் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து உள்ளார்களா?, இல்லையா? என்பது குறித்தும் ஒரு சர்வே எடுத்துக் கொண்டுள்ளார்கள். இந்த சர்வேயையும் ஆசிரியர்கள்தான் செய்து கொண்டுள்ளார்கள்.
இப்படியாக தொடர்ச்சியாக நாள்தோறும் புதுப் புது உத்தரவாக மே மாதம் 1ஆம் தேதி தொடங்கி இன்று 21ஆம் தேதி வரை தொடர்ச்சியாக ஆசிரியர்கள் கோடை விடுமுறையிலும் வேலை செய்து கொண்டுள்ளார்கள். GPF, நிறுத்தப்பட்ட சரண்விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாட்டை சரி செய்யதல் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த ஆசிரிய பெருமக்களுக்கு இதுவரை ஒரு ரூபாய்கூட பணப்பலன் கிடைக்கவில்லை. மாறாக உள்ள விடுப்புகளும் பறிபோய் கொண்டு இருக்கிறது. உண்மையிலேயே இது போன்ற கோடை விடுமுறையை காலி செய்யக்கூடிய உத்தரவுகள் ஆட்சியாளர்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா எனத் தெரியவில்லை.
இது ஒரு புறம் இருக்க கோடை காலத்தில் பள்ளிகளில் எந்த வித சிறப்பு வகுப்போ, வேறு விதமான பயிற்சிகளோ நடத்தக்கூடாது என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருப்பதை பள்ளிக்கல்வித்துறை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது தோல்வியடைந்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்து புகைப்படங்கள் எடுத்து EMIS update செய்ய சொல்லி இருக்கிறார்கள் இப்படியாக ஒவ்வொரு நிமிடமும் இரவு பகல் என்று பாராமல் வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்ற ஆசிரியர் பெருமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது நிதர்சனம்.