நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள சென்று கொண்டிருந்த போது, விபத்தில் காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ்க்கு காத்திராமல் அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மனிதநேயம் மிக்க செயல் சமூக ஆர்வலர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நாள்தோறும் பல்வேறு அரசு வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து மே.17- அன்று காலை வழக்கம் போல் ராசிபுரம் பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள செல்லும் வழியில், பொம்மகுட்டைமேடு, லட்சுமி திருமண மண்டபம் அருகே, நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி, மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த ரங்கசாமி என்பவரதுமகன் சதீஷ் (38) சாலை விபத்தில் காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்தார். அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆட்சியர் உடனடியாக மீட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் வந்த மற்றொரு அரசு அலுவலக வாகனத்தில் ஏற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனையடுத்து விபத்தில் காயமடைந்த சதீஷ் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரின் மனிதநேய செயல் சாதாரண குடிமகன் ஒவ்வொருவரும் இது போன்ற சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியுள்ளது.