பணம் கொண்டு செல்வதில் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் – நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பணம் கொண்டு செல்வதில் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் – நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும், பணம் கொண்டுசெல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜீன் 4ம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தல் வரை கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்ட ரொக்கம் ரூபாய் ஐம்பதாயிரத்தை இரண்டு லட்சமாக உயர்த்தி தர தமிழகம் முழுக்க உள்ள வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு தேர்தல் ஆணையம் செவிசாய்க்கவில்லை. இதனை தொடர்ந்து 02/04/2024ம் தேதி மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்த பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா ஏப்ரல் 19ம் தேதி தேர்தலுக்கு பிறகு பணம் கொண்டுசெல்லும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விலக்கிக் கொள்ளவேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். தற்போது அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. வணிகர்களின் நியாயமான எந்த ஒரு கோரிக்கையையும் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகும் ஜீன் 4ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் வணிகர்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள். ஏப்ரல் 19ம் தேதிக்கு பிறகு இந்த கட்டுப்பாடுகளை விலக்கிகொள்ள தேர்தல் ஆணையம் மறுத்தால் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வணிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பேரமைப்பின் மாநில தலைவர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.