பாவை கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா – ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பாச்சல் பாவை கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள கல்பனா சாவ்லா திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் அனைவரையும் வரவேற்று தலைமை வகித்துப் பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக ஜோஹோ கற்றல் பள்ளிகள் நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி கலந்து கொண்டார். முன்னதாக பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.பிரேம்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
தொடர்ந்து பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் சிறப்பு விருந்தினர் ராஜேந்திரன் தண்டபாணிக்கு நினைவுப்பரிசளித்து கெளரவித்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் ஜோஹோ கற்றல் பள்ளிகள் நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி ‘கட்டுப்பாடும், கண்ணியமும், கடமையுணர்வும் கொண்ட, பண்பு மிகுந்த பாவை மாணவ, மாணவிகளை காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவச் செல்வங்களே, முன்னேற்றத்தைப் பற்றிய நம் எண்ணங்களே, சாதனைகளுக்கு வழிவகுக்கிறது. உங்கள் எண்ணங்களை மெருகேற்றப் பின்வரும் உத்திகள் உங்களுக்கு துணைபுரியும். முதலாவது, கைபேசியில் மூழ்காமல், அழகும், ஆக்கப்பூர்வமான விஷயங்களையும் கொண்ட, உங்கள் சுற்றியுள்ள உலகத்தை கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுது தான் உங்கள் எண்ணங்கள் விரிவடையும் என்றார்.
மேலும் பேசிய அவர், எந்த ஒரு விஷயத்தையும், என்னால் கற்றுக் கொள்ள முடியும் என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். மேலும் பல்வேறு துறைகளில், உங்கள் அறிவை வளர்த்துக் கொண்டு, அதனை நீங்கள் தேர்ந்த துறையில் செயல்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். இறுதியாக நீங்கள் எப்பொழுதும் குறிக்கோளுடன் செயல்படுவது, உங்களை சாதனையாளராக உயர்த்திக் கொண்டேயிருக்கும். அதனோடு உங்களுக்கென்று, சில கட்டுப்பாடுகள், உங்களை முன்னேற்றத்திற்கு வழிநடத்தும் என்று பேசினார்.
விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் டி.ஆர்.மணிசேகரன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், பொருளாளர் முனைவர் எம்.இராமகிருஷ்ணன், இணைச்செயலாளர் என்.பழனிவேல், இயக்குனர் (சேர்க்கை) கே.செந்தில், இயக்குனர் (நிர்வாகம்) கே.கே.இராமசாமி, இயக்குனர் (பள்ளிகள்) சி.சதிஷ், பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளின் முதல்வர் ச. ரோகித் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இறுதியில் பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் நன்றி கூறினார்.