நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை ( 21.04.24) நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முன்னதாக வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி யோகம், கோ பூஜை, காவேரி தீர்த்தம் அழைக்க புறப்படுதல், யாக பூஜை ஹோமம் போன்றவை நடைபெற்றன. சனிக்கிழமை விசேஷ சாந்தி, பூர்ணாஹுதி, விமானத்தில் கலசம் வைத்தல், கண் திறத்தல் தீபாராதனை போன்றவை நடைபெற்றன.
இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யாக சாலை ஹோமம், கும்பங்கள் புறப்பாடு போன்றவை நடத்தப்பட்டு சிவாச்சாரியார்களால் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழாவினை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மடாதிபதி ராஜசேகர சுப்பிரமணிய சிவாச்சாரியார், விஜயசுப்பிரமணிய குருசாமிகள் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பலர் பங்கேற்று கோபுர கலசாலங்களுக்கு புனித நீர் ஊற்றி அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடத்தினர். முன்னதாக இதற்கான விழாவில் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன், ராஜம்மாள் ரங்கசாமி, ஆசைத்தம்பி, அமுதா ஆசை தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் என பக்தர்கள் பலரும் பங்கேற்று கோபுர தரிசனம் செய்தனர்.