நாமக்கல் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள பா.ஜ.க., வின் முக்கிய நட்சத்திர வேட்பாளர்களில் கே.பி. ராமலிங்கமும் ஒருவர். 45 ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்ற இவர் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதியுடன் நெருங்கி பழகியவர். மத்திய, மாநில அரசுகளுடன் போராடி பல திட்டங்களை கொண்டு வரும் திறமை படைத்தனர். பல நேரங்களில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அரசு அதிகாரிகளுடன் போராடி பல திட்டங்களை செயல்படுத்தியவர்.
அனைவருக்கும் வீடு, கழிவறை திட்டம், அனைவருக்கும் கேஸ் சிலிண்டர், வங்கி கணக்கு, இலவச உணவு தானியம், முத்தரா கடன், சாலையோர வியாபாரிகளுக்கு கடன், கல்வி உதவித்தொகை, மலிவு விலை மருத்து கடை என பல திட்டங்களை மத்திய அரசு வழங்கி மக்களின் வாழ்வை உயர்த்தி வருகிறது. அதற்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய வேட்பாளராக கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார்.
மக்கள் விரோத ஆட்சியாக தி.முக., உள்ளது. மக்கள் மீது சுமை அதிகரித்துள்ளது. பால் கட்டணம் உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, பதிவு கட்டணம் உயர்வு என மக்களின் மீது பாரத்தை ஏற்றி வருகின்றனர். தி.மு.கவுக்கோ, அ.தி.மு.கவுக்கோ ஓட்டுப்போட்டு தவறை செய்யாதீர்கள். அவர்களை தேர்ந்து எடுத்தால் எந்த திட்டமும் கிடைக்காது என்று பேசினார் ஜி.கே. வாசன். கூட்டத்தில் பாஜக, தமாக., பாமக., உள்ளிட்ட கூட்டணி கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
டீக்கடையில் போண்டா விற்பனை:
இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் வாக்கு சேகரிப்பின் போது அங்குள்ள டீக்கடையில் வேட்பாளர், கட்சியினருடன் சேர்ந்த டீக்குடித்தார். மேலும்
வாடிக்கையாளர்களுக்கு போண்டா விற்பனை செய்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஜி.கே.வாசன்.