நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணா திமுக வேட்பாளராகப் போட்டியிடும் ராஹா சு.தமிழ்மணி புதுசத்திரம் கிழக்கு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக ஒன்றிய நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டு உற்சாகமாக வரவேற்பளித்தனர். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் பெண்கள், மூதாட்டிகளுடன் என்றும் நெஞ்சில் நீங்காத எம்ஜிஆர் பாடல்களை பாடி வாக்கு கேட்டுவருவதால், கிராமப்புறத்தில் பெண்கள் குறிப்பாக விவசாயக்கூலித்தொழிலாளர்கள் ஆரவாரத்துடன் பெரும் வரவேற்பினை அளித்துவருகின்றனர்.
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுசத்திரம் கிழக்கு ஒன்றியப் பகுதியின் பல்வேறு பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒன்றியப் பகுதியான பாச்சல், கதிராநல்லூர், தாத்தையங்கார்பட்டி, கண்ணூர்பட்டி, திருமலைப்பட்டி, காரைக்குறிச்சிப்புதூர், களங்காணி, உடுப்பம், மின்னாம்பள்ளி போன்ற பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றவாறு வேட்பாளர் சு.தமிழ்மணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விவசாயிகள், பொதுமக்கள், விவசாயத் தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் வேட்பாளர் சு.தமிழ்மணி, நாடாளுமன்றத் தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றிடவும், மாநிலத்தின் உரிமைகள், தேவைகள் மத்திய அரசிடம் கேட்டுப்பெறவும் வாக்காளர்கள் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றார்.மேலும், தமிழகத்தில் மறைந்த ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அவரது மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தடையின்றி கிடைக்க எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு மக்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் அவர் பேசினார். பல்வேறு இடங்களில் மூதாட்டிகளை கட்டி அரவணைத்து அவர்களுடன் எம்ஜிஆர் திரைப்பட பாடல்கள் பாடியவாறு வாக்குகள் கேட்டார். இது கிராமப்புற பெண்களிடம் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் பெண்களிடம் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. பல்வேறு கிராமங்களில் பெண்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்து ஆரத்தி எடுத்து திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் சு.தமிழ்மணியுடன் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் மின்னாம்பள்ளி நடேசன், பிரபாகரன், கோபிநாத், அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.