Thursday, October 8, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம் நகராட்சியில் போலி ஆவணம் பயன்படுத்தி பணி முடிப்பு சான்று கொடுக்கப்பட்டுள்ளதா?: விசாரணை நடத்திட பத்து...

ராசிபுரம் நகராட்சியில் போலி ஆவணம் பயன்படுத்தி பணி முடிப்பு சான்று கொடுக்கப்பட்டுள்ளதா?: விசாரணை நடத்திட பத்து ரூபாய் இயக்கம் காவல் நிலையத்தில் புகார்

ராசிபுரம் நகராட்சியில் போலி ஆவணம் பயன்படுத்தி பணி முடிப்பு சான்று கொடுக்கப்பட்டுள்ளதா?: விசாரணை நடத்திட பத்து ரூபாய் இயக்கம் காவல் நிலையத்தில் புகார்

ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளரின் கையெழுத்திட்டு போலி ஆவணங்கள் மூலம் 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு பணி முடிப்பு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி, இது குறித்து விசாரணை நடத்திட வேண்டும் என பத்து ரூபாய் இயக்கம் ராசிபுரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்துள்ளது. ஏற்கனவே நகராட்சியில் ஆணையாளராக இருந்த நிவேதா கையெழுத்து போலியாக இட்டு மோசடி என புகார் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் நல்வினை விஸ்வராஜூ தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஆர்.நாகலட்சுமியிடம் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: நகராட்சி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி ஆணையாளர் கையெழுத்து போலியாக பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நகர்மன்றத் தலைவருக்கும் தொடர்பு உள்ளது.


நகரில் விதிகளுக்கு முரணாக கட்டப்பட்ட கட்டிடங்களை முறைப்படுத்தவும், இடிக்கவும் நகராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நகராட்சி ஆணையாளருக்கு தெரியாமல், ஆணையாளர் கையெழுத்திட்டு, நகராட்சி முத்திரை பயன்படுத்தி போலி ஆவணம் மூலம் கட்டிட பணிகள் முடிக்கப்பட்டதாக சான்று வழங்கி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய குற்றச்செயலாகும். இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் கையெழுத்திட்டு போலி ஆவணங்கள் தயாரித்தவர்கள் மீது விசாரணை நடத்தி குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் மனு கொடுக்கப்படும் என்றும் பத்து ரூபாய் இயக்கத்தினர் புகாரில் தெரிவித்துள்ளனர்.

நகர்மன்றத் தலைவர் மறுப்பு:

இது குறித்து ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பத்து ரூபாய் இயக்கத்தினர் என் மீது கூறப்பட்டுள்ள புகார் முற்றியிலும் தவறானது, உண்மைக்கு புறம்பானது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் நகருக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. சாலை வசதி, குடிநீர் வசதி, தூய்மை பணிகள், மின் விளக்குகள், வணிக வளாகம், தினசரி மார்கெட் என பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பத்து ரூபாய் இயக்கம் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை. நகராட்சி கட்டிட அனுமதி சான்று, தடையில்லா சான்று என்பது அலுவலர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இப்பணிகளில் நகர்மன்றத் தலைவர் என்ற முறையில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு இருக்கையில் இந்த புகார் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும். இது உள்நோக்கம் கொண்டது. இது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!