Saturday, June 13, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் பெண்ணிடம் 16 சவரன் நகை, ரொக்கம் கொள்ளை...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் பெண்ணிடம் 16 சவரன் நகை, ரொக்கம் கொள்ளை : முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அட்டகாசம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.பட்டணம் பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்து வந்த இருவர் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி 16 சவரன் நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் களரம்பட்டி சாலையில் உள்ள அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது இரு மகள்களான மேகலா, சுகன்யா ஆகியோர் திருமணமாகி குடும்பத்தினருடன் ராசிபுரத்தில் தனியாக குடியிருந்து வருகின்றனர். சதாசிவத்தின் மனைவி கலைச்செல்வி என்கின்ற தேன்மொழி (58) தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். தோட்டத்தின் ஒரு பகுதியில் கலைச்செல்வியின் இரு மருமகன்களான அசோக்குமார், கணபதி ஆகியோர் கான்கிரீட் சிமெண்ட் செங்கல் ஆலை நடத்தி வருகின்றனர். செங்கல் தயாரிப்பு ஆலையின் உரிமையாளர்களான மருமகன்களும், தொழிலாளர்களும் 7 மணி அளவில் பணியை முடித்துச்சென்றுவிட்டனர். இந்நிலையில் வியாழக்கிழமை கலைச்செல்வி ராசிபுரம் நகரில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று விட்டு இரவு சுமார் 8 மணி அளவில் தோட்டத்துக்கு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் இரவு சுமார் 8:45 மணி அளவில் இவரை நோட்டமிட்டு இருந்த இருவர் வீட்டில் புகுந்துள்ளனர். முகமூடி அணிந்து வந்த இருவரும் கலைச்செல்வி வாயை அடைத்து விட்டு துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி கழுத்து மற்றும் காதில் இருந்த நகைகளை கழற்றிக்கொண்டு, பீரோவில் இருந்த நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் வளையல், தோடு, கொடி, தங்க காசுகள் என சுமார் 16 சவரன் நகைகள், ரொக்கம் ரூ.20 ஆயிரம் எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர்.

இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து ராசிபுரத்தில் இருந்த தனது மருமகன்களுக்கும் , மகள்களுக்கும் கலைச்செல்வி தகவல் தெரிவித்துள்ளார். தோட்டத்திற்கு வந்த அவர்கள் சுற்றுப்பகுதியில் தேடி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் ராசிபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் .இதனையடுத்து ராசிபுரம் டிஎஸ்பி., எம்.விஜயகுமார், காவல் ஆய்வாளர் ஆர்.நாகலட்சுமி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர் . கைரேகை நிபுணர்களும் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சுற்றுப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவை சரக டிஐஜி., பி.சுவாமிநாதன், நாமக்கல் மாவட்ட எஸ்பி., சி.விமலா உள்ளிட்டோரும் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் உறவினர்கள், செங்கல் ஆலை ஊழியர்கள் ஆகியோர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர் . இதுகுறித்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!