கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும் என அறிவிப்பு.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளன. பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக தலைவர் அன்புமணி இம்முறை போட்டியிடாத நிலையில் அவரது மனைவி சவுமியா தேர்தலில் களமிறங்கவுள்ளார். இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்களின் விபரம் பின்வருமாறு :-
* 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.
* இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
* மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.
* தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும், அவர்களை தனிப் பிரிவாக்கி இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும்.
* கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்குப் பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.
* மத்திய அரசின் வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.
* உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பா.ம.க. வலியுறுத்தும்.
* மத்திய அரசில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
* வேளாண் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலங்களில் மாதம் ரூ.2,500 நிதியுதவி.
* நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.
* குறிப்பிட்ட காலத்திற்குள் என்.எல்.சி. நிறுவனத்தை தமிழகத்திலிருந்து அகற்ற நடவடிக்கை.
* மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களுக்குத் தடை விதிக்கப்படும்.
* புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கங்கை முதல் காவிரி வரையிலான இந்தியாவின் பெரும்பான்மையான நதிகள் இணைக்கப்படும். அதற்காக தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.
* பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசும், காவிரியின் துணை ஆறுகளின் குறுக்கே கேரள அரசும் தடுப்பணைகள் கட்டுவதை மத்திய அரசின் மூலமாக பா.ம.க. தடுத்து நிறுத்தும்.