முன்பே எச்சரித்த அமெரிக்கா – என்ன நடந்தது?
மாஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபிசி சரிபார்த்த வீடியோ காட்சிகளின்படி, வடமேற்கு புறநகர் கிராஸ்னோகோர்ஸ்கில், குறைந்தது நான்கு பேர் உடல் முழுவதும் மறைத்தவாறு உடை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருந்தது. அப்போது அரங்கிற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது மட்டுமின்றி, மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் பலியானவர்களில் குழந்தைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்த “பயங்கரவாத தாக்குதலை” கடுமையாக கண்டனம் செய்துள்ளது.
இணையத்தில் பரவிவரும் சரிபார்க்கப்படாத அறிக்கையின்படி, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் தீவிரவாதக் குழு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிக்காக 6,000க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் குவிந்தனர். இந்நிலையில் இசைக்குழு மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார். அதேநேரம் இசைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தற்போது வரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேரடியாக மக்களிடம் பேசவில்லை. ஆனால், அவரது அலுவலகத்தைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரி, பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து நலம்பெறத் தனது ஆறுதல்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது நுழைவுவாயில் ஒன்றில் பணியில் இருந்த காவலர் ஒருவர், எப்படி இந்த வன்முறை கும்பல் ஆயுதங்களோடு அரங்கிற்குள் நுழைந்தது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
“அங்கு மூன்று பாதுகாவலர்கள் இருந்தனர். தாக்குதல் மேற்கொண்டவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் ஒரு விளம்பரப் பலகையின் பின்னால் ஒளிந்து கொண்டனர்,” என்று அவர் ரஷ்ய டெலிகிராம் சேனலான பாசாவிடம் கூறியுள்ளார்.
மேலும் “தாக்குதல் மேற்கொண்ட அந்த நபர்கள் எங்களிடமிருந்து 10 மீ [30 அடி] தொலைவில் நின்றுகொண்டு, தரைத் தளத்தில் இருந்தவர்களை நோக்கி கண்முன் தெரியாமல் சுடத் தொடங்கினர்,” என்று தெரிவித்துள்ளார் அவர்.
அரங்கின் உள்ளே இருந்த பெண் ஒருவர், தானும் மற்ற பார்வையாளர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதை உணர்ந்தவுடன், மேடையை நோக்கி ஓடியதாக ரஷ்ய தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார் .
“அங்கிருந்த ஸ்டாலில் ஒரு நபரை ஆயுதத்துடன் பார்த்தேன். அங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது. நான் ஒலிபெருக்கியின் பின்னால் மறைந்தவாறு செல்ல முயன்றேன்,” என்று அவர் கூறியுள்ளார்.