நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் இந்திய குற்றவியல் சட்டங்களில் உள்ள சமகால பிரச்சனைகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் பயிற்சி பட்டறை சனிக்கிழமை ( 24.01.26) நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் அருண் தலைமை வகித்தார். இதனை தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் துவக்கி வைத்தார்.இதில் அவர் பேசினார்.

குற்றம் சாட்டப்படுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி உரிய தீர்ப்பை வழங்குவதும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதும் குற்றவியல் சட்டங்களின் இரண்டு பிரதான நோக்கங்கள் ஆகும். குற்றம் சாட்டப்படுபவர்களுக்கும் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கும் வழங்கப்படும் நீதியானது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றதாகும் என்று வீ. ராமராஜ் தெரிவித்தார்.
குற்றம் நடைபெறும் போது காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் விசாரணை நடைமுறைகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் உரிமைகள் போன்றவை இந்திய குற்றவியல் சட்டங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு உதவும் வகையிலான சட்டங்கள் போதுமானதாக இல்லை. குற்றங்களாலும் அதிகாரத்தை மீறுவதாலும் பாதிக்கப்படுவோருக்கான அடிப்படை கொள்கைகள் ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 1985 நவம்பர் 29 அன்று உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நாடுகள் அனைத்து குற்றங்களாலும் பாதிக்கப்படுவோருக்கு உதவும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளன என்றும் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
அனைத்து வகையான குற்றங்களாலும் குற்றங்களால் பாதிக்கப்படுபவருக்கு வழக்கு பதிவு செய்யவும் மருத்துவம் செய்யவும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை சரி செய்யவும் நீதிமன்றத்தில் சட்ட உதவி செய்யவும் நிதி உதவி செய்யவும் அவர்களது பாதுகாப்புக்கும் பொருத்தமான சட்டம் தற்போது தேவையாகும். இதன் மூலம் குற்றவியல் நிர்வாகத்தில் சமகாலத்திய அவசியமான குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை வலுப்படுத்த முடியும் என்றும் வீ. ராமராஜ் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களை காட்டிலும் அதிகமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் வாகன விபத்துக்களால் இறப்பும் உடல் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. வாகன விபத்துக்களால் பாதிக்கப்படுபவருக்கு காப்பீட்டு நிறுவனங்களில் இழப்பீடு பெற்று தரும் பணியை அரசே மேற்கொள்ளலாம். இதற்காக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உதவி சட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தினால் பாதிக்கப்படுவோருக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இந்த சட்டம் மூலமாக தேசிய அளவிலும் மாநில அளவிலும் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி ஆணையங்களை அமைக்க வேண்டும். அரசுக்கு எவ்வித செலவு இல்லாமல் இழப்பீட்டுத் தொகையிலிருந்து குறைந்த நிர்வாக கட்டணத்தை பெற்று ஒரு நிதியத்தை உருவாக்கலாம். அதில் அனைத்து வழக்கறிஞர்களையும் இணைத்து செயல்படுத்துவதன் மூலமாக அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் மாதாந்திர உதவித் தொகையும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நிரந்தர வருமான திட்டத்தையும் ஓய்வு ஓய்வு பெறும் வழக்கறிஞர்களுக்கு ஓய்வுத்தையும் வழங்கும் வகையில் ஏற்பாடுகளை செய்யலாம். இதன் மூலம் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களும் அனைத்து வழக்கறிஞர்களும் பலனடைவார்கள் என்று ராமராஜ் தெரிவித்தார். இதற்கான ஆய்வு அறிக்கை இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் மேஜிஸ்ட்ரேட் எஸ். ராஜகுமாரன், ஏற்காடு மேஜிஸ்ட்ரேட் ஆர். இளஞ்செழியன், வழக்கறிஞர் எஸ் ஏ தமயந்தி அமர்நாத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். உதவி பேராசிரியர்கள் சுமதி சுவர்ணலட்சுமி, பா. பிரியா, பெ. ரமேஷ் உட்பட ஏராளமான மாணவ, மாணவிகளும் பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர்.





